மகாளய அமாவாசை: புனித நீராட ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.

இந்துக்கள், மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து தங்களது முன்னோர்கள் நினைவாக வழிபாடு நடத்துவது வழக்கம். இவற்றில் ஆடி, தை, மாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் சிறப்பானதாகும். இந்த நாட்களில் நாடு முழுவதும் உள்ள குளங்கள், ஆறுகள், நதிகள் மற்றும் கடல்களில் மக்கள் புனித நீராடி இறந்துபோன தங்கள் முன்னோர் நினைவாக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வழிபடுவர்.

புரட்டாசி அமாவாசை தினமான மகாளய அமாவாசையை முன்னிட்டு, இன்று நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், ராமேஸ்வரம் வந்திருந்து அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடினர். அதன்பின் கடற்கரையில் அமர்ந்து, தங்கள் குடும்பத்தின் நலனுக்காக சங்கல்ப பூஜையும், அதனை தொடர்ந்து இறந்துபோன தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

அதன்பின்னர் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி,  சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து, அமாவாசை விரதத்தை முடித்தனர்.  மகாளய அமாவாசை  தினமான இன்று, ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், கோயிலில் தீர்த்தமாடவும் பக்தர்கள் கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் தங்களின் முன்னோர்களை வழிபட தவறியவர்கள் இந்த மகாளய அமாவாசையன்று தங்கள் முன்னோர்களை வணங்கினால், முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். அதனால், மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனிதநீர் ஆடிச் செல்கின்றனர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டன. மேலும், பாதுக்காப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!