கோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை ஒப்புக்கொண்டாரா யுவராஜ்?

சேலம்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டதாக காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், கடந்த 11-ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். அவரிடம் கடந்த 3 நாட்களாக நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி நாகஜோதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

அதேபோல், கடந்த 13-ம் தேதி சரணடைந்த யுவராஜின் கார் டிரைவர் அருணிடம் விசாரணை நடத்தினர். அப்போது 'கோகுல்ராஜை கொலை செய்தது யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்?' என்பது குறித்த விவரங்கள் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இன்று யுவராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அருண் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் யுவராஜிடம் சில கிடுக்குப்பிடி கேள்விகளைக் கேட்டதாகவும், அப்போது, யுவராஜ் உண்மையை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. தரப்பில் அதிகாரபூர்வமாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக  கோகுல்ராஜ் கடத்தப்பட்ட பகுதி என கருதப்படும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலுக்கு யுவராஜை , இன்று அதிகாலையில் அழைத்துச்சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் ஒருமணி நேரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோகுல்ராஜ் சடலமாக கிடந்த இடத்துக்கும் யுவராஜை அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், அங்கு வைத்தும் விசாரணை நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!