Published:Updated:

கெஞ்சிய இளைஞர்கள்.. கைதான 539 பேர்! -திருச்சியில் முதல் நாள் ஊரடங்கு எப்படி இருந்தது? #corona

திருச்சி சாலைகள்
திருச்சி சாலைகள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. அதில் முதல்நாள் முழுமையாக முடிவடைந்துள்ளது. அந்தவகையில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டம் இன்று எப்படி இருந்தது எனப் பார்ப்பதற்காக ஸ்பாட் விசிட் அடித்தோம்.

வெறிச்சோடிக் கிடக்கும் தேசிய நெடுஞ்சாலை..

ஊரடங்கு உத்தரவு காரணமாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். எப்போதும் பரபரப்பாகக் காட்சியளிக்கும் திருச்சி பெரிய கடைவீதி, சத்திரம் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஏதும் இல்லாததால் வெறிச்சோடிக் கிடந்தன.

திருச்சி நம்பர் 1 டோல்கட் அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார் நடத்திய சோதனையின் போது, காரைக்காலிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர், தாங்கள் பணியாற்றும் நிறுவனம் தற்போதுதான் விட்டார்கள், கடந்த இரண்டு நாள்களாகச் சோறு தண்ணீர் இல்லாமல் கிடந்தோம். அதான் சொந்த ஊர் செல்கிறோம் என போலீஸாரிடம் கெஞ்சிக் கேட்டபடி பயணித்தார்கள்.

குவிந்த பயணிகள்
குவிந்த பயணிகள்

மேலும், திருச்சி சமயபுரம், வாளாடி சுற்று வட்டார கிராமங்களில் ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் இருந்தாலும், பல இடங்களில் ஊரின் எல்லைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் உள்ளூரைத் தாண்டி வெளியில் மக்கள் போக முடியாத நிலை. அந்த ஏரியாக்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. திருச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதியில்லை. முகப்பு நுழைவாயில் மூடப்பட்டிருந்தது. உள்ளே பத்திரிகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்கள்.

கிருமி நாசினி தெளிப்பு!

சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர் கிளம்பிவந்தனர். அவர்களில் பாதிப்பேர் திருச்சி வழியாகச் சென்றதால் முதல்நாள் பயணிகளால் நிரம்பி வழிந்த பேருந்து நிலையம் வெறிச்சொடிக் கிடந்தது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம்

அதையடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் திருச்சி மாநகராட்சியின் சார்பில் மத்தியப் பேருந்து நிலையம் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மதியம் தூய்மைப் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

சிக்கிய ஐந்து இளைஞர்கள்..!

அரசு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் சாலைகளில் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களில் பயணித்த வண்ணம் இருந்தனர். இதேபோல், ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்த டீக்கடைகளில் கும்பல் குவிந்தது. இதையடுத்து, ``இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றிவரும் இளைஞர்களைக் கைது செய்வதுடன், வாகனத்தையும் பறிமுதல் செய்வோம்" எனத் திருச்சி காவல்துறை ஆணையர் அறிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடு
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடு

அதேவேளையில், திருச்சி மணப்பாறையில் உத்தரவை மீறி பைக்கில் சுற்றித் திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் ஓட்டிவந்த 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், டீக்கடைகள் இன்று மாலைமுதல் மூடப்படும் எனத் திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

வியாபாரிகள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்!

``திருச்சி காந்தி மார்க்கெட் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே செயல்படும். அங்கு மொத்த விற்பனை மட்டுமே செயல்படும். பொதுமக்கள் யாரும் காந்தி சந்தைக்குச் செல்லக் கூடாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி சந்தைக்கு விடுமுறை. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளில் காய்கறி வாங்க வேண்டும்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

வியாபாரிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும். அவ்வாறு அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

முதல்நாளில் 539 பேர் கைது!

திருச்சி மாவட்டத்தில் 483 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் வீடுகளில் தனியாக இருக்க வலியுறுத்தி உள்ளோம். அதில் சிலர் வெளியே வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. அவ்வாறு மீறி வருபவர்கள் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரித்தார்.

திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றிச் சாலைகளில் நடமாடிய, கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது செய்யப்பட்டதுடன், 325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்கு உத்தரவு அமலான முதல் நாளிலேயே மத்திய மண்டலக் காவல்துறை அதிரடி காட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு