தோல் குறைபாட்டை 'வெண்புள்ளிகள்' என்று குறிப்பிட அரசு ஆணை: தமிழக அரசு

சென்னை, டிச.31: தோல் குறைபாட்டை இனி "வெண்புள்ளிகள்' என்று மருத்துவத் துறையினர் உள்பட அனைவரும் குறிப்பிட வேண்டும் எனப் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் எடுத்த தொடர் முயற்சிகளையடுத்து, இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பு உத்தரவை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. இதற்காக அந்த அமைப்பின் செயலர் கே. உமாபதி, முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் வி.கு.சுப்புராஜ் வெளியிட்ட அறிக்கை:

""லுக்கோடெர்மா-விட்டிலிகோ என பிற மொழிகளில் அழைக்கப்படும் வெண்புள்ளிகளை, "வெண்குஷ்டம்' என தவறாகத் தமிழில் அழைக்கின்றனர். மேலும் மருத்துவர்கள்-அரசு மருத்துவமனைகளின் அறிவிப்புப் பலகைகள்-பாட புத்தகங்கள்-ஊடகங்களிலும் வெண்குஷ்டம் என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது.

உண்மையில் "லுக்கோடெர்மா அல்லது விட்டிலிகோ' என அழைக்கப்படும்  வெண்புள்ளிகள் நோய் அல்ல என்றும் அது பிறருக்குத் தொற்றும் தன்மை கொண்டதல்ல; குஷ்டம் எனப்படும் தொழு நோய்க்கும் வெண்புள்ளிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது மருத்துவ ரீதியான-அறிவியல் ரீதியான உண்மை என்பதால், இந்தக் குறைபாட்டை வெண்புள்ளிகள் என்று அழைக்க வேண்டும் என்று வெண்புள்ளிகள் இயக்கச் செயலர் உமாபதி அரசை கேட்டுக்கொண்டார்.

இது குறித்து கருத்தைத் தெரிவித்த  பொது சுகாதாரத் துறை இயக்குரிடமிருந்து கடிதம் பெறப்பட்டது. "வெண்குஷ்டம்' என்று அழைக்கப்படுவதால் தொழுநோய் தொடர்பான நோய் என்றும் மரபு நோய் என்றும் எண்ணப்படுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. எனவே வெண்புள்ளிகள் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் பரிந்துரை செய்தார்.

அரசு இதை கவனத்துடன் பரிசீலித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளோரின் மனக்குறை நீங்கவும் மருத்துவத் துறையில் உள்ளோர் சரியான சொற்றொடரைப் பயன்படுத்தும் வகையிலும் வருங்காலங்களில் "வெண்புள்ளிகள்' என்றே அழைக்க வேண்டும் என அரசு உத்தரவிடுகிறது''.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!