வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (03/11/2015)

கடைசி தொடர்பு:12:18 (03/11/2015)

தமிழகத்தின் அடுத்த தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?

சென்னை: சந்தீப் சக்சேனா இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து,  தமிழகத்தின் அடுத்த புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார் என்பதில் தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தின் 26 வது தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்  சந்தீப் சக்சேனா. சென்ற ஜூன் மாதம் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன என்று திமுக சார்பில் புகார்கள் கூறப்பட்டன.

மேலும் இது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையீடும் செய்யப்பட்டிருந்தது. அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சந்தீப் சக்சேனா மீது கடும் அதிருப்தி தெரிவித்து புகார் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து மத்திய அரசுத் தரப்பில்  விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தீப் சக்சேனா மீது தமிழக எதிர்க்கட்சிகள் கூறிய புகார்கள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதனால் அவரை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்ய முடிவெடுத்தது என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் சந்தீப் சக்சேனா  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம், தமிழகத்தில் வரும் 2016 ல் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் அது தனக்கு எதிர்காலத்தில் நெருக்கடியாக அமைந்துவிடக் கூடாது என்றும் அதனால்  டெல்லி பகுதிக்கு மாறுதல் வழங்கிடவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து  இருந்தார் என்றும்  கூறப்படுகிறது.

இந்நிலையில்,இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் செய்திகள் உலாவருகின்றன.

இதனிடையே தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக, தமிழ் நாடு சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் நிர்வாக மேலாளர் பதவி வகித்து வரும் ஹர் சஹாய் மீனா அல்லது தொழிலாளர் மற்றும்  வேலை வாய்ப்புத்துறை அரசு  செயலாளர் பதவி வகிக்கும் குமார் ஜெயந்த் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து உரிய உத்தரவு இன்று அல்லது நாளை  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருவரில் குமார் ஜெயந்த் ஐ ஏ எஸ் ஏற்கெனவே இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்