வெடியில்லா தீபாவளி... வித்தியாச கிராமம்!

னிதநேயம் என்பது மனிதர்களின் மீதானது மட்டுமல்ல; நம்மை சார்ந்திருக்கிற எல்லாவற்றின் மீதும் ஏற்படும் உணர்வு என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது தமிழக கிராமம் ஒன்று. தங்கள் பகுதியில் உள்ள சரணாலயத்தில் உள்ள பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் தீபாவளியை தியாகம் செய்துவருகிறார்கள் அந்த கிராம மக்கள். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி கொள்ளங்குடிபட்டி என்ற அந்த மனிதநேயம் மிக்க  கிராமம். இங்கு 17 ஏக்கர் பரப்பளவில் பறவை சரணாலயம் அமைந்துள்ளது. இந்த  சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் பறவைகள் வரத் துவங்கிவிடும். மார்ச் மாதம் வரை ஆறு மாதங்கள் இங்கு தங்கி இருந்து,  அவைகள் இனபெருக்கம் செய்யும்.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, வொஸ் ஐபீஸ், மார்க்கலின் போன்ற அரிய வகை பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன. தற்பொழுது பருவ மழை பெய்து வரும் நிலையில் பறவைகள் வரத்து அதிகரித்தள்ளது. இந்த மாதம் இறுதி வரை பறவைகள் வரவு இருக்கும் என எதிரப்பார்க்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் பறவைகள் வர துவங்கியது நாள் முதல், இந்த கிராம மக்களுக்கு தீபாவளி என்பது வெடி இல்லா தீபாவளியாக மாறிவிட்டது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த கிராம மக்கள் தீபாவளி பண்டிகையின் பொழுது வெடி வெடிப்பதை தவிர்த்து விட்டனர். வெடிச் சத்தம் காரணமாக பறவைகள் இந்த இடத்தில் இருந்து பறந்து சென்றுவிடும் என்பதாலும், இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு வெடிச் சத்தம் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதாலும் இவர்கள் ஒருமித்த கருத்துடன் கிராமத்தில் வெடி வெடிப்பதை தடை செய்துவிட்டனர்.

தீபாவளியின் மற்ற அம்சங்களான கொட்டுமேளம் அடிப்பது , வாணவேடிக்கை நடத்துவது என பறவை களுக்கு  பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் இந்த கிராம மக்கள் செய்வது இல்லை.

தொடர்ச்சியாக பறவைகளுக்காக வெடிகளை தியாகம் செய்த இந்த கிராம மக்களை கௌரவம் செய்ய விரும்பிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை வேட்டங்குடி  கிராமத்திற்கு அனுப்பி, அந்த கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

- அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!