தாமிரபணியில் 125 டன் துணிக் கழிவுகள்!

பாண தீர்த்தத்துக்குக் கீழே இருக்கும் காரையாறு அணையில் இருந்து வெளியே வரும் தண்ணீர் சொரிமுத்து அய்யனார் கோயிலைக்  கடந்து வருகிறது.  தற்போது சிங்கம்பட்டி ஜமீன் பராமரிப்பில்  இருக்கும் இந்தக் கோவிலுக்கு ஆடி அமாவாசைக்கு முன்னதாகத் தொடர்ந்து 10 நாட்களில் சுமார் 10 லட்சம் பேர் கூடுகிறார்கள். பல்வேறு  வேண்டுதல்களுக்காக மக்கள் கூடும் இந்த இடத்தில் குப்பைகள் மொத்தமாகச்  சேருகின்றன. அவற்றை ஆற்றிலேயே தூக்கி வீசுவதால் தாமிரபரணி  மாசுபடுகிறது. மனிதர்களின் மொத்தக் கழிவும் ஆற்றில் கலப்பதால் தாமிரபரணி முதன்முதலாக இங்குதான் பெருமளவில் மாசுபடுகிறாள்.

 

பின்னர் தரைக்கு ஓடி வரும் தாமிரபரணி பாபநாசம் கோவிலின் முன்பாக சமதளத்தைச்  சந்திக்கிறது. அதுவரையிலும் வடக்கு நோக்கிப் பாய்ந்து வந்த தாமிரபரணி இந்தக்  கோவிலின் முன்பு தான் கிழக்கு நோக்கி திரும்புகிறாள். இந்தக் கோவிலும் திதி கொடுப்பதற்கு உகந்த இடம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குழுமுகிறார்கள். முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காகப் புத்தாடைகளை வாங்கி ஆற்றில் வீசி எறிகிறார்கள். அதனால் ஆற்றில் எங்குப் பார்த்தாலும் துணிகள் குவியல் குவியலாகக் கிடக்கிறது. 

 

நதி  இப்படி மாசு படுவதையடுத்து 'சித்தர் கோட்டம் 'என்ற அமைப்பு தாமிரபரணியைச் சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியது. முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் தொடங்கி வைத்த இந்தச் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்றன. அப்போது பாபநாசம் அருவிக்கு அருகில் மட்டும் 125 டன் துணி கழிவுகளும், 25 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட இதர குப்பைக் கழிவுகளும் அகற்றப்பட்டன. நதியின் போக்கையே சீர்குலைக்கும் இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த, தற்போது ஆற்றின் ஓரத்தில் தொட்டி அமைக்கப்பட்டு அதில் துணிகளை போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலை மீதே சென்று ஆற்றை மாசுபடுத்திய மக்கள் சம தளத்தில் பாயும் தாமிரபரணியை விட்டு வைப்பார்களா என்ன? ஆற்றுக்கான அடுத்த பாதிப்பு பாபநாசத்துக்கு வெகு அருகிலேயே தொடங்குகிறது, தனியார் ஆலைக்கழிவு மூலமாக!

அது பெரும் கதை... துயரக் கதை! 

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!