அரியலூர் மாவட்டத்தில் ஏரிகள் உடையும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்! | Lakes in Ariyalur district will breaks at any time; public in fears

வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (16/11/2015)

கடைசி தொடர்பு:17:37 (16/11/2015)

அரியலூர் மாவட்டத்தில் ஏரிகள் உடையும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்!

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 5 முக்கிய ஏரிகள் முழுவதும் மழைவெள்ளத்தால் நிறைந்து உடையும் நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதனிடம் பேசினோம்.

"அரியலூர் மாவட்டத்தில் பொதுபணித்துறை கட்டுபாட்டில் 100க்கும் மேற்பட்ட ஏரி,குளங்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 50 க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் உள்ளன. ஆக மொத்தம் 150 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ளன. அவற்றில் பல ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் நகர்ப்  புறங்களில் உள்ள ஏரி, குளங்கள் ஒன்று கூட நிரம்பவில்லை. காரணம் ஆக்கிரமிப்புகள் தான்" என்ற குற்றச்சாட்டோடு ஆரம்பித்தார்.

"தா. பழூர் ஒன்றியத்தில் மட்டும் சித்தேரி, அனைகுடி ஏரி, காசுடையான் ஏரி, இடங்கன்னி சுக்கிரன் ஏரி, பூவோடை ஏரி என ஐந்து ஏரிகளும் இப்ப உடையுமோ அப்ப உடையுமோ என்ற நிலை காணப்படுவதால்,  அச்சத்தில் உறைந்திருக்கின்றனர் கிராம மக்கள். மாவட்ட நிர்வாகம் போர்க் கால நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்கவேண்டும். ஆனால், பணத்திற்காக 6000 குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள் அதிகாரிகள்.

திருமானூர் சுக்கிரன் ஏரியின் பரப்பளவு 2000 ஏக்கர்.இதனை தூர்வார 2.37 கோடி ஒதுக்கினார்கள். ஆனால் அதிகாரிகள் ஏரியின் மையப் பகுதியை தூர்வாராமல் கரை ஓரங்களில் தூர்வாரியதோடு கரையோரங்களை மண்ணை வைத்து நிரவிவிட்டு சென்றுவிட்டார்கள். கடுமையாக மழை பெய்வதால் மண்  அரிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஏரி எப்போது உடையுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள். ஏரி உடைந்தால் சிலுப்பனூர், மாத்தூர், ஆதனூர், காமரசவள்ளி, கோமன், ஓரியூர் போன்ற ஊர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

5000 ஏக்கர் விளை நிலம் பாதிப்பதோடு 6,000 குடும்பங்கள் பாதிக்கப்படும். ஆனால் மக்களை நினைக்காமல்  அதிகாரிகள் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டுவதில்தான் குறியாக இருந்துள்ளனர். காசுக்காக மக்களின் வாழ்க்கையில் அதிகாரிகள் விளையாடுவது சரியா?" என்று வேதனையுடன் கேட்டு முடித்தார் விசுவநாதன்.

ஆக்கிரமிப்புகளை எடுத்தாலே பல பிரச்சனைகளைத்  தீர்க்கலாம்.

-எம்.திலீபன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்