வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (18/11/2015)

கடைசி தொடர்பு:15:04 (18/11/2015)

ரெங்கநாதர் கோவில் மகாகும்பாபிஷேகம்: பக்தர்களால் திணறிய ஸ்ரீரங்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க திரண்ட கூட்டத்தால் ஸ்ரீரங்கம் திணறியது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். கடந்த 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.  விழாப் பணிகளுக்காக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.   இதனை அடுத்து இதற்கான பணிகள் துவங்கிய நிலையில், முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதால் கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.

ஶ்ரீரங்கம் சென்டிமெண்ட்தான் ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பியதாக அப்போது பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதிவேற்றார். இதையடுத்து மீண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 9-ம்தேதி  கிழக்கு வாசல் கட்டை கோபுரம், கிழக்கு வாசல் தாமோதரகிருஷ்ணர் கோபுரம், ஐந்து குழி மூன்று வாசல் கோபுரம், பரமபத வாசல் கோபுரம், தாயார் சன்னதி ஆர்யபடாள் கோபுரம், தெற்கு வாசல் 1–வது கட்டை கோபுரம், தெற்கு வாசல் 2-வது கட்டை கோபுரம் உள்ளிட்ட 11 கோபுரங்களுக்கும் ஸ்ரீவிஷ்வக்சேநர் சன்னதி, ஸ்ரீசேரகுலவல்லி தாயார் சன்னதி, ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, ஸ்ரீநம்மாழ்வார் சன்னதி, ஸ்ரீமேல பட்டாபிராமர் சன்னதி மற்றும் 43 உபசன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மீதமுள்ள மூலவர் ரெங்கநாதர் சன்னதி, பெரிய பிராட்டியார் என போற்றப்படும் தாயார் சன்னதி, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதி, பெரிய கருடன் சன்னதி, உடையவர் ராமானுஜர் சன்னதி  உள்ளிட்ட 5 சன்னதிகளும், ராஜகோபுரம், ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்ட 10 கோபுரங்களுக்கு புனரமைப்பு பணிகள்  செய்வது தொடர்ந்தது. இதன் பணிகள்  முடிவுற்றதை அடுத்து இவற்றுக்கு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மேலும் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவுக்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள்,  நேற்று இரவில் இருந்தே திருச்சி ஶ்ரீரங்கத்தில் கூடியிருந்தனர்.  பார்க்கும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

பாதுகாப்பு பணிக்காக,  நேற்று காலை முதலே ஸ்ரீரங்கம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மத்திய மண்டல ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை  விடப்பட்டது.

காலை 7.15 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் நிரப்பப்பட்ட குடங்களுடன் பட்டாச்சாரியார்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சன்னதிகளுக்கும், கோபுரங்களுக்கும் எடுத்து ஊர்வலமாக வர, காலை 8.45 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோவில் ராஜகோபுரம், ரெங்கநாதர் சன்னதி தங்க விமானம், ரெங்கா ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், ஆரி கோபுரம், ஆரியப்படாள் வாசல் கோபுரம், வடக்கு வாசல் கோபுரங்கள் மற்றும் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது ஒரே நேரத்தில் வேதங்கள் முழங்க, கோபுர கலசங்கள் மற்றும் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.  மகா கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தின் அனைத்து பகுதிகளும் மின் விளக்குகளால் ஜொலித்தன.

- சி. ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி. மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்