வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (21/11/2015)

கடைசி தொடர்பு:17:07 (21/11/2015)

நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் தெரியுமா?

சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள்  நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் என்பது குறித்து சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார்  விளக்கம் அளித்துள்ளார். 

முதல்வர் உத்தரவுபடி, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நடைபெறும் 7 சித்த மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் கோகுல இந்திரா, விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்பு நடவடிக்கைகள் முடிந்து, நிவாரணப் பணிகளுடன் மருத்துவ முகாம்கள் மூலம்
தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை, வில்லிவாக்கம்  சிட்கோ நகரில் மழை நீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் நீரினை வெளியேற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையிலும் நிவாரணப் பணிகளை பார்வைட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், கூடுதலாக 5 ஜேசிபி வாகனங்கள் மற்றும் ராட்சத மோட்டார் பம்புகளை வைத்து அனைத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீரினை வெளியேற்றி, பிளீச்சிங் பவுடர் தெளித்து,  சுகாதார பணிகளை விரைவுபடுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அங்கு நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் கோகுல இந்திரா, விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் 7 சிறப்பு சித்தா மருத்துவ முகாம்களை பார்வையிட்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் தொற்று நோய்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் சித்த மருந்துகள் மற்றும் நிலவேம்பு கஷாயம் விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது. மழை பாதித்த பகுதிகளில் தொற்று நோய்களை கட்டுப்படுத்த மழைக்கால சிறப்பு சித்தா மருத்துவ முகாம்கள் அமைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி வில்லிவாக்கம் சிட்கோ நகரில் 7 சிறப்பு சித்த மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இதுவரை இம்முகாம்கள் மூலம் இப்பகுதிகளில் உள்ள 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலவேம்பு குடிநீரை பருகியுள்ளனர். மேலும், நிலவேம்பு குடிநீர் பருகுவது குறித்து விழிப்புணைர்வும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மழை பாதித்த பகுதியில் இம்முகாம்களை கூடுதலாக நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார் கூறுகையில், "காய்ச்சல் கண்டவர்கள் தினந்தோறும் 2 முறை 30 மி.லி முதல் 50 மி.லி வரை 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீரினை பருகவேண்டும். மற்றவர்கள் தினந்தோறும் 1 முறை 7 நாட்களுக்கு பருகவேண்டும். நிலவேம்பு குடிநீரானது அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் கட்டுப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும் உதவுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்த தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்