கிரானைட் முறைகேடு: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார் சகாயம்!

துரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சட்ட ஆணையர் சகாயம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆனால் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சகாயம் நியமனத்தை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சகாயத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க அரசு அதிகாரிகள் மறுத்ததாக கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையிலும் சட்ட ஆணையர் சகாயம் தலைமையிலான குழு,  கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 3 ம் தேதி விசாரணை தொடங்கியது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள், விவசாய விளைநிலங்கள், நீர்நிலைகளில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆட்கள் செல்ல முடியாத இடங்களில், கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் முறைகேடுகள் நடைபெற்ற குவாரிகளின் காட்சிகள் பதிவு செய்தது சகாயம் குழு.

வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கனிமத்துறை, சுரங்கவியல் துறையினர் தங்களது தரப்புத் தகவல்களை சகாயம் குழுவிடம் அறிக்கையாக தாக்கல் செய்தனர். மேலும் பொதுமக்கள் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட சகாயம் குழுவினர், புகார்தாரர்களை சம்பந்தப்பட்ட இடத்துக்கு வரவழைத்து  இழப்புகள் தொடர்பான குழு விவரங்களையும் கேட்டறிந்தார்.

மேலும், சகாயம் குழுவிடம், பொதுமக்கள் நரபலி புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சகாயமே களத்தில் இறங்கி நரபலி கொடுக்கப்பட்ட இடத்தை ஊழியர்கள் உதவியுடன் தோண்டினார். அப்போது, எலும்புக்கூடுகள் கிடைத்தது மேலும் பரபரப்பை உண்டாக்கியது. 21 கட்டங்களாக சகாயம் குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், 3 மாத விசாரணைக்கு பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா தலைமையிலான அமர்வு முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!