ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு! | Jayalalitha failed to keep Tamil Nadu govt. under her control: Kathar Mohideen

வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (24/11/2015)

கடைசி தொடர்பு:11:21 (25/11/2015)

ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!

திருச்சி: ஜெயலலிதா, தமிழக அரசை தனது கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்,  திருச்சி ரோஷன் மஹாலில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தலைவராக காதர் மொய்தீன், பொதுச்செயலாளராக முஹம்மது அபூபக்கர், பொருளாளராக ஷாஜகான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த காதர்மொய்தீன், ''தமிழகத்தில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் கொடுமையான நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையவில்லை. எனவே, மத்திய அரசு  இன்னும் அதிக தொகையை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் தமிழகத்தின் பாதிப்பை உணர்ந்து ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அதனை பெற்று தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் தனது கட்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். ஆனால், அவர் ஆட்சி செய்யும் அரசின் கட்டுப்பாடு அவரிடம் இல்லை. அவரது பிடியில் இருந்து அரசு தளர்ந்து விட்டது என்பதைவிட, தொலைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் யாரும் அரசு கட்டுப்பாட்டில் இல்லை.

வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும். தொடர்ந்து தி.மு.க கூட்டணியிலேயே நாங்கள் பயணிப்போம்.  மதச்சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் தி.மு.க கூட்டணிக்கு வரவேண்டும். மேலும், வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளான 12 சட்டமன்ற தொகுதிகளை இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒதுக்க வலியுறுத்தி கேட்போம். அதில் 8 தொகுதிகளை இந்திய முஸ்லிம் லீக் கட்சி கேட்க, இந்த கூட்டத்தில் கலந்தாலோசித்து உள்ளோம்.

வரும் டிசம்பர் 24-ம் தேதி, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 1 லட்சம் இளைஞர்கள் ரத்ததானம் செய்ய முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close