திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை: 2,668 அடி உயர  திருவண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

உலக பிரசித்திப்பெற்ற பஞ்ச பூதத்தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாள்  21-ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாள் 22-ம் தேதி மகா தேரோட்டமும் நடைப்பெற்றது.

தீபத்திருவிழாவின் உச்சகட்டமாக 10-ம் நாளான இன்று, மகா தீபப்பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு, பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன் ஒருவனே பலவாக காட்சியளிக்கிறான் என்ற ‘ஏகன் அனேகன்' தத்துவத்தை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணியில் இருந்து அம்மனி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 5 மணியளவில், அண்ணாமலையார் கோயில் 3-ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். பின்னர், உமையாளுக்கு இடப்பாகம் வழங்கிய சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவமாடியபடி மாலை 5.57 மணிக்கு கோயிலுக்குள் இருந்து அங்கு வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை, மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் அர்த்தநாரீஸ்வர் காட்சியளிப்பது வழக்கம். அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டி, கோயில் தங்க கொடிமரம் அருகே அகண்டத்தில் தீபம் ஏற்றினர்.

இதையடுத்து சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாரை போற்றும் பாமாலைகளும், சங்கொலியும் முழங்கின. மலை மீது ஜோதி வடிவாக அண்ணாமலையார் தோன்றியதைக் கண்டு, திரண்டிருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா' என விண்ணதிர முழக்கமிட்டனர்.

இந்த திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள், நீதிபதிகள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். ஏ.டி.ஜி.பி தலைமையில், 4 ஐ.ஜி, 2 டி.ஜ.ஜி, 19 எஸ்.பி, 8 ஏ.எஸ்.பி, 20 ஏடி.எஸ்.பி, 68 டி.எஸ்.பி மற்றும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காசி.வேம்பையன்

படங்கள்: கா.முரளி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!