24 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள்: மிரட்டும் பெண்கள் விடுதி! | Intimidating women Hotel

வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (29/11/2015)

கடைசி தொடர்பு:10:27 (29/11/2015)

24 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள்: மிரட்டும் பெண்கள் விடுதி!

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வேலை பார்க்கும்  பெண்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக விடுதிகளில் தங்குவது தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதை பெரும்பாலான விடுதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தரமான உணவு வழங்காமல் சரியான தங்கும் வசதியை ஏற்படுத்தித் தராமல் பெண்களை அலைக்கழித்து வருகின்றன.

சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ளது ஒய்.டபுள்.யூ.சி என்னும் தனியார் பெண்கள் விடுதி. இங்கு சுமார் 300க்கும் அதிகமான வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த விடுதியில் கெட்டுப் போன உணவையும், தரமில்லாத உணவையும் வழங்கியதாகவும், இதைத் தட்டிக்கேட்டதால் விடுதி நிர்வாகத்தினர் மிரட்டியதாகவும், விடுதியில் தங்கும் பெண்கள் வேப்பேரி காவல் நிலையத்தில் விடுதி நிர்வாகத்தின்மீது புகார் அளித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த விடுதி நிர்வாகம் புகார் அளித்தவர்களை 24 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

விடுதியில் தங்கும் பெண் ஒருவர் நம்மிடம் கூறும்போது, ''இவ்ளோ நாளா... சாப்பாடு கொஞ்சம் சுமாரா தான் இருந்துச்சு. இப்ப நவம்பர் 1-ம் தேதியிலிருந்து மெஸ்ஸுக்கு புது காண்ட்ராக்டர் மாத்தினாங்க. இந்த காண்ட்ராக்டர் வீரமணிக்கு சென்னையில சில தனியார் ஹோட்டல்களும் இருக்கு. அவர் காண்ட்ராக்டர் எடுத்ததுல இருந்து சாப்பாட்டை சாப்பிட முடியாத அளவுக்கு தரமில்லாம இருந்துச்சு. நைட் வெச்ச கெட்டுப்போன சாம்பார், முந்தின நாள் வெச்ச பாயாசம்னு இதையே மறுநாளும் வெச்சாங்க.

ஒருநாள் சாப்பாட்டுல புழு நெளிஞ்சது. மெஸ் பில் இந்த மாசம் கூடுதலா 450 ரூபாய் அதிகம் ஆக்கியும் பொங்கல், சப்பாத்தி மட்டுமே அடிக்கடி டிபனா கொடுத்தாங்க. ஒருநாள் நைட் டிபனுக்கு ஒரே ஒரு தோசை மட்டும் தான் எல்லோருக்கும் கொடுத்தாங்க. பத்தலைனு கேட்டப்போ அவ்வளவுதான் இருக்குனு சொல்லி மெஸ் நிர்வாகம் எங்களை விரட்டி அடிச்சது. இதைப் பத்தி விடுதி நிர்வாகத்துக்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணோம். ரொம்ப யோசிச்சு நைட்டு பத்தரை மணி வரைக்கும் காத்திருக்க வைச்சு தோசையை ரெடி பண்ணிக் கொடுத்தாங்க.

இது மட்டுமல்லாம காலையில கொண்டு போற சாப்பாடு ஆபிஸ் லஞ்ச் டைமுக்குள்ள கெட்டுப்போயிரும். இதனால மெஸ்ஸுக்கு ஃபீஸ் கட்டுறதோட வெளில வாங்கி சாப்பிட்டச் செலவும் எங்களுக்குத்தான் அதிகமாச்சு. இதுக்கு நடுவுல நிறைய பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குனு பலவித பிரச்னைகள் வந்துச்சு. சாப்பாடு ஒத்துக்காம அலர்ஜியான ஒரு பெண் ஃபுட் கார்ப்பரேஷன்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணாங்க. அங்கே இருந்து வந்தவங்க தர ஆய்வு செஞ்சதுல இது மூன்றாம் தரத்துல கூட இல்லைனு சொல்லிட்டு இன்னும் ஒருவாரத்துக்கு சமைக்கக்கூடாது, வெளில இருந்து வாங்கி சப்ளை பண்ணனும்னு உத்தரவு போட்டுட்டு போனாங்க. ஆனா, வெளில இருந்து எங்களுக்கு உணவு வாங்கித்தராததால் ஒரு வாரத்துக்கான உணவுக் கட்டணத்தைக் கட்டமாட்டோம்னு நாங்க சொன்னோம்.

இதை ஏத்துக்க முடியாத ஹாஸ்டல் நிர்வாகமும், ஃபுட் காண்ட்ராக்டர் வீரமணியும் சேர்ந்து இரண்டு பெண்களைக் கூப்பிட்டு தகாத வார்த்தைகளால் பேசி, அவர்கள் முன்னிலையில் நாற்காலிகளைப்போட்டு உடைத்து மிரட்டி இருக்காங்க. இந்த சம்பவத்துக்குப்பிறகு கமிஷனர் ஆபிஸ்க்கு போயி அவங்க மூலமா வேப்பேரி காவல் நிலையத்துல முறையா புகார் செஞ்சோம். நேத்து புகாரை ஏற்று எங்களுக்கு சி.எஸ்.ஆர் காப்பி அளித்த காவல்துறை இப்பவரை எஃப்.ஐ.ஆர் காப்பியை வழங்கலை. இந்த நிலையில் புகார் கொடுத்த பிறகு கோபமான ஹாஸ்டல் நிர்வாகம் அவசரஅவசரமா ஒரு கூட்டத்தை நடத்தி, இன்னும் ஒரு வாரத்துக்கு ஹாஸ்டல் இயங்காதுனு சொல்லிட்டு எல்லோரையும் 24 மணிநேரத்துக்குள்ள வெளியேறச்சொல்லி எச்சரிக்கை விடுத்தாங்க.

அப்படிப்போக முடியாதுனு சொன்னா போலீஸ்ல நாங்க கொடுத்த கம்ப்ளெய்ண்ட்டை வாபஸ் வாங்கச் சொல்லி எங்களை ப்ளாக் மெயில் பண்ணாங்க. நாங்க இவ்வளவு போராடுறதுக்கு காராணம் என்னவா இருக்க முடியும்? பசி ஒண்ணுதான். இப்போ திடீர்னு எங்க எல்லோரையும் வெளில போகச் சொன்னா நாங்க எங்கே போவோம்? நாங்க முறையா டெப்பாசிட்டும் ஃபீஸும் கட்டித்தானே தங்கி இருக்கோம்? தர்மத்துக்கா தங்கி இருக்கோம்?’’ என்று குமுறினார்.

இது இந்த ஒரு விடுதியில் மட்டுமல்ல. சென்னையில் இயங்கும் பெரும்பாலான விடுதிகளின் நிலைமையும் இதேதான்!

இது சம்மந்தமாக விடுதி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

’’இது மாதிரியான ஒரு சூழல் இந்த விடுதி ஆரம்பித்த நாள் முதல் வந்ததே இல்லை. சில பெண்கள் வேணும்னே தொடர்ந்து பிரச்னைகள் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்கதான் மத்தவங்களையும் தூண்டி விடுறாங்க. முழுக்க முழுக்க ஆத்ம சுத்தியோடு சேவை மனப்பான்மையோடும், மனநிறைவோடும்தான் இங்கே நிர்வாகத்தை நடத்திக்கிட்டு இருக்கோம். 5 நாள் கடும் மழையில ஒட்டுமொத்த சென்னையே அலைக்கழிஞ்சப்போ காய்கறிகள், சமையல் பொருட்கள் வாங்குறதுல தாமதமாச்சுங்கிறது மட்டும்தான் உண்மை. அதுவும் சில நாட்கள்தான். இவங்க சொல்ற மாதிரி மோசமான உணவை நாங்க வழங்கலை. பிடிக்கலைனா வேற ஹாஸ்டல் போகலாமே? சென்னையில வேற ஹாஸ்டலா இல்லை?’’ என்ற பதில் வந்தது.

சென்னையில் புற்றீசல்கள் போல பெண்கள் விடுதிகள் முளைத்து வந்தாலும், எந்த அளவிற்கு பெண்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகிறது என்பது கேள்விக்குறியே?

-செங்காந்தள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்