வெளியிடப்பட்ட நேரம்: 07:19 (02/12/2015)

கடைசி தொடர்பு:07:19 (02/12/2015)

சென்னை கனமழை: பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக சென்னையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாம்களின் பட்டியல் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.chennaicorporation.gov.in/about-chennai-corporation/Relief_centre.pdf
தொலைபேசி எண்கள், தங்குமிடத்திற்கான முகவரிகள் என மிக முக்கியமான தகவல்கள் அடங்கிய தொகுப்பு

https://docs.google.com/spreadsheets/d/1rZc3e9scewKxbZBn0vfDqkxOTy_NJYUBSfsVPgnkmdY/htmlview?pli=1&sle=true#

இந்நிலையில் மற்ற ஊர்களில் வசிக்கும் மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி பதிவுகள் மூலம் தொடர்ந்து கேட்டுக்கொண்டபடி உள்ளனர்.

 

சென்னையில் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை தொலைபேசி எண்களோடு பட்டியலிட்டு முகநூலில் பதிந்திருக்கிறார் சரவண கணேஷ் என்பவர். சுமார் 200 மருத்துவமனைகளின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களோடு Microsoft Excel ஃபைலாக அந்த தகவல்களை பதிவேற்றியிருக்கிறார்.

சென்னை மருத்துவமனைகளின் முகவர் & தொலைபேசி எண்கள் :

https://drive.google.com/file/d/0B3NBWSPUDSZZUjlMWkhrQXBxa2c/view
ஷாஜகான் என்பவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சில விஷயங்களை நண்பர்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

ஷாஜகானின் பதிவு: மழை முன்னெச்சரிக்கைகள்

(முன்னெச்சரிக்கை என்பது பொருந்தாதுதான். இருந்தாலும்... திருத்திய மீள் பதிவு)
இன்னும் நான்கைந்து நாட்களுக்கு மழை இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மழையினால் மின்தடை ஏற்படலாம், தண்ணீர் கிடைக்காமல் போகலாம். எனவே, வாய்ப்பு அல்லது நேரம் இருக்கும்போது கீழ்க்கண்டவற்றை செய்வது நல்லது.

* பிஸ்கட், பால் அல்லது பால் பவுடர், அவசர மாத்திரைகள், தண்ணீர் கேன், பேட்டரி செல்கள், மெழுகுவர்த்தி, ரெடிமிக்ஸ் உணவு வகைகள், காய்கறிகள் போன்ற பொருட்களை போதுமான அளவுக்கு (மட்டும்) வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

* மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

*  செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள். பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

*  மின்தடை இருக்கும்போது யுபிஎஸ் அல்லது இன்வர்ட்டரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.
அத்தியாவசியமான பணி இருந்தாலொழிய மழைநீரில் நடக்காதீர்கள்.

* தரைத்தளத்தில் வசிப்பவர்கள் மேடான இடத்திற்கு நகர வேண்டிய தேவை வரக்கூடும் என்பதால், முன்னரே அதற்கான இடங்களை அறிந்து வைத்திருங்கள்.

* குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்.

* குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்.

* ரயில், பஸ் என முக்கியப் போக்குவரத்து வசதிகள் தடைபடும் என்பதால் சென்னை தொடர்பறற தீவாகும் சாத்தியங்கள் உண்டு. ஆடம்பரங்களைத் தவிர்த்திடுங்கள்.

* உதவும் வாய்ப்பு உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இயன்ற அளவுக்கு உதவுங்கள்.

* கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனிக்கவும் - வேகமாக ஓடும் வெள்ள நீர் அரை அடி உயரம் இருந்தாலும் போதும், உங்கள் வாகனத்தை இழுத்துச்செல்லப் போதுமானது. எச்சரிக்கையாக இருங்கள்.

இப்படியாக மழையினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தொடர்ந்து தகவல்களை நிறைய பேர் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

எஸ்.அருண்பிரசாந்த்
(மாணவர் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்