வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (03/12/2015)

கடைசி தொடர்பு:16:04 (03/12/2015)

மின் விநியோகம் சீராவது எப்போது? ஜெயலலிதா விளக்கம்!

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கி உள்ளார். குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்த இடங்களில் மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில், இப்பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பின்னர் மின் விநியோகம் படிப்படியாக சீர் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், " வடகிழக்கு பருவ மழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் முடிய உள்ள காலம் தமிழகத்திற்கு முக்கியமான மழைக் காலம் ஆகும். வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, கன மழை பெய்யும் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். மேலும், பெரு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை வழங்கவும் நான் உத்தரவிட்டிருந்தேன்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை 28.10.2015 அன்று தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வயதது. குறிப்பாக, வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக 8.11.2015 தேதி முதல் 16.11.2015 வரை பெய்த பெருமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயின. இந்த மாவட்டங்களில் உடனடி நிவாரணம் வழங்கவும், பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைத்திடவும் அமைச்சர் பெருமக்கள் குழு ஒன்றினையும், மூத்த இயதிய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் நான் அனுப்பி வைத்தேன். வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக, வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழத்தம் காரணமாக மீண்டும் 1.12.2015 தேதியிலிருந்து இயத மாவட்டங்களில் மீண்டும் பெருமழை பெய்யத் துவங்கியது.

ஒரு சில மணி நேரங்களிலேயே 20 செ.மீ. வரை சில இடங்களில் மழை பெய்தது. மேலும், ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5000 கன அடி உபரி நீரும், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 25000 கன அடி உபரி நீரும், செங்குன்றம் நீர்த்தேக்கத்திலிருந்து 5800 கன அடியும், சோழவரம் நீர்த்தேக்கத்திலிருந்து 400 கன அடி உபரி நீரும் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, இந்திய ராணுவம், கப்பற் படை, விமானப் படை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் 50 நிவாரண முகாம்களில் 6358 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14,97,653 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் 146 நிவாரண முகாம்களில் 38495 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,53,101 உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. சென்னை மாவட்டத்தில் 97 முகாம்களில் 62267 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவன்றி, 17,28,349 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 167 முகாம்களில் 57516 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,17,333 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 470 பம்புகள், 75 அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், 82 ஜே.சி.பி. / பொக்லைன்கள் மூலமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையால் முறிந்து விழும் மரங்கள் சிறப்புக் குழுக்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்தினை சீர் செய்யும் வகையில் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்த இடங்களில் மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில், இப்பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பின்னர் மின் விநியோகம் படிப்படியாக சீர் செய்யப்படும்.

இம்மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக அமைச்சர் பெருமக்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவன்றி, சென்னை மாநகராட்சி ஆணையரோடு இணையது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மண்டலம் ஒன்றுக்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வீதம், 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் அனுப்பப்பட்டு பணியாற்றி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுடன் இணைந்து 13 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் ஒரு மாவட்ட வருவாய் அதிகாரியும் பணியாற்றி வருகின்றனர்.

கனமழையின் காரணமாக வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 24 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மீட்புப் பணியில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனது வேண்டுகோளின்படி கூடுதலாக 15 குழுக்கள் விமானம் மூலம் வரவுள்ளனர்.

எனது வேண்டுகோளின்படி இந்திய ராணுவம் ஏற்கனவே 9 (Column) குழுக்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், இந்திய கடற்படையின் 200 வீரர்களும் மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் வீரர்களும் தங்களது படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படை நான்கு ஹெலிகாப்டர்களுடன், இரண்டு கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழியாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாநில பேரிடர் மீட்பு குழுவின் 150 பயிற்சி பெற்ற வீரர்கள், கடலோர காவல் படையின் 3 குழுக்கள், 60 பயிற்சி பெற்ற வீரர்களுடன் தமிழ்நாடு காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் வீரர்கள் இரவு பகலாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் காவலர்களும் போக்குவரத்து காவலர்களும் வெள்ள பாதிப்பினால் மக்கள் வெளியேறிய பகுதிகளில் திருட்டுகள் நிகழா வண்ணம் ரோயது மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு துறைகளை சார்ந்த குறிப்பாக வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், மின்சாரம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளம், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களும் இரவு பகலாக வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம், அதிலும் குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள் வரலாறு காணாத பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சரியான நேரத்தில் பொது மக்களை மீட்டு பத்திரமாக நிவாரண முகாம்களில் தங்க வைத்தல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது மற்றும் நிவாரண முகாம்களை சுகாதார முறையில் பேணுவது ஆகியவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று (3.12.2015) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இயதிய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் நான் பார்வையிட்டேன். ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி, திருவொற்றியூர் பெரும்பாக்கம், ஊரப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் அசோக்நகர், வியாசர்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சடையான்குப்பம், மணலி புதுநகர், மற்றும் ரெட்டை ஏரி, புழல், பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றையும் பார்வையிட்டேன். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுவதுடன், மருத்துவ வசதிகளும் செய்து தரப்படுகிறது. வெள்ள நீர் சூழ்ந்த பல பகுதிகளில் மக்கள் உயர்தளங்களில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை ஹெலிகாப்டர் மூலமும், படகுகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உயர்தளங்களிலுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய் மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் உள்ள மக்களுக்கு பால் கிடைத்திடும் வகையில் அவர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் பவுடர் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க