தனி நபர்களின் நிவாரணப்பொருட்களில் அரசியல் கட்சி சொந்தம் கொண்டாடுவதா? வாசன் கண்டனம்!

தஞ்சை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் பொருட்களின்மீது அரசியல் கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது என்று த.மா.க தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

தஞ்சையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த வாசன், "  கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். வீடுகளை இழந்து, ஆவணங்களை இழந்து, நடுத்தெருவில் நிற்கின்றனர். உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்புநிலை திரும்புகிற வரையில் இடம், உணவு, உடை கொடுத்து காப்பாற்ற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேட்டியளித்த அவர், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான காய்கறி, பால், உணவு பொருட்களை  அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்களை கைது செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதாரத்துறையினர் சுறுசுறுப்பாக 24 மணி நேரமும் செயல்பட்டு தொற்றுநோய் பரவாமல் பாதுகாக்க வேண்டும்.

வீட்டு பத்திரங்கள், பள்ளிச்சான்றுகள், மின்சார அட்டை, முதலியவற்றை இழந்து நிற்கிறார்கள். மீட்புப் பணிகள் முடியும்வரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்டு சிறப்பு குழுக்களை அமைத்து சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அரசே பயிர்காப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கடன்தொகை அசல், வட்டிகளை தள்ளுபடி செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வருமானவரி, தொழில்வரி, மின் கட்டணம் ஆகியவற்றை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மூலம அனுப்பப்படும் பொருட்களை அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது” என்றார்.

- ஏ. ராம்
படங்கள்: கே. குணசீலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!