அடையாறு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை !

சென்னை: சென்னையில் நிகழ்ந்த மழைவெள்ள பாதிப்புக்கு, அடையாறு ஆற்றின் கரைகள் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள்,வீடுகள் கட்டப்பட்டதே முக்கிய காரணம் என்று புகார் எழுந்துள்ள நிலையில்,அந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி தீவிரப்படுத்தியுள்ளார். 

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி வரும் கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெரு மழையின் அளவை விட கூடுதலாகப் பெய்து, நகரின் அனைத்து சாலைகளும் வெள்ளம் செல்லும் பாதைகளாக மாறிப் போயுள்ளன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ளம் வடிந்து 3 நாட்களாகியும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை பெரும் பாதிப்புகளை தந்துள்ளது.

இந்நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ள பாதிப்பு சென்னையைப் புரட்டி எடுக்க காரணம் மாநகரின் முக்கிய நதியான அடையாறு, ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கி தனது கரைகளை இழந்ததே என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இதனால் மிகத் தாமதமாக கண்விழித்த தமிழக அரசு,  அடையாறு மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அடையாறின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த பல கட்டடங்களை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்து,  அதற்கான பணிகளை உடனிருந்து கவனித்து வருகின்றார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி.


தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம் பகுதியிலிருந்து மழை நீர் வெளியேறவும்  அடையாறு கால்வாயில் வெள்ள நீர் கலக்கவும், இந்தப் பகுதியில் மிகப்பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்தக் கால்வாயின் நீளம் 14 கி.மீட்டர். கால்வாயின் நீளம் மட்டும் மாறவில்லை.ஆனால் இதன் மொத்த அகலமான  60 மீட்டரில்,தற்போது 18 மீட்டர் மட்டுமே மிச்சம் உள்ளது.கடந்த 15 ஆண்டுகளில் மெல்ல மெல்ல சுருங்கி சில வருடங்களில் 18 மீட்டராக மாறியுள்ளது. அரசியல், அதிகாரம் இவற்றைக் கொண்டு ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாயை கபளீகரம் செய்துள்ளனர். இதன் விளைவாகவே இந்த பகுதியில் உள்ள எல்லா இடங்களும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பரிதவித்தனர்.

இதனையடுத்து இந்தப் பகுதிகளை ஆய்வு செய்த ஆட்சியர்  கெஜலட்சுமி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், காம்பவுன்ட்  சுவர்கள் என்று எல்லாவற்றையும் அப்புறப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மேலும் அருகிலிருந்து அகற்றும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு வருவதால் ஆக்கிரமிப்புகள் விரைந்து அகற்றப்படுகின்றன. அதே போல ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டும் வருகின்றன.

மேலும் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை வரதராஜபுரம் பகுதியில் 42 கடைகள், கிஷ்கிந்தா சாலையில் 120 வீடுகள், சேலையூர் ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் 7 வீடுகள் என்று பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு

இதேபோல், செங்கல்பட்டியில் உள்ள குண்டூர் ஏரி உடைக்கப்பட்டதால், வேதாச்சலம் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியிருப்பதாலும், திம்மராஜகுளம் பகுதியில் உள்ள காவல்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாலும், வேதாச்சலம் பகுதி வீடுகளில் புகுந்த தண்ணீர் வெளியேற முடியவில்லை.

இதனால், ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி வருவாய்த்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், திம்மராஜகுளம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!