சென்னை வெள்ளம்: பழம் பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் பிறந்த நாள் கொண்டாடவில்லை!

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பழம் பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் இன்று தனது 93வது பிறந்தநாளை கொண்டாடவில்லை.

சென்னையில் பெய்த கனத்த மழை காரணமாக, நகரமே பல நாட்களாக வெள்ளக்காடாகி கிடந்தது. மக்கள் தாங்க முடியாத துயரத்துக்குள்ளானார்கள்.  இதனால் பல தலைவர்கள், நடிகர்கள் பிறந்த நாளை கொண்டாட வேண்டாமென்று முடிவெடுத்துள்ளனர்.

தற்போது அந்த வரிசையில் பழம் பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமாரும் இணைந்துள்ளார். இன்று நடிகர் திலீப்குமாருக்கு 93வது பிறந்த நாள் ஆகும். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக அவர் பிறந்த நாளை கொண்டாடவில்லை.

இது குறித்து நடிகர் திலீப்குமாரின் மனைவி  சாய்ரா பானு  கூறுகையில், '' சென்னை மக்கள் அடைந்த துயரம் அவரை வெகுவாக பாதித்து விட்டது. பிறந்த நாள் கொண்டாட இது சரியான தருணம் இல்லை என்று கருதுகிறோம்'' என்றார்.

நடிகர் திலீப்குமார் கடந்த 1944-ம் ஆண்டு முதல் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கி கொடி கட்டி பறந்தவர். இவரது நடிப்பில் அந்தாஸ், தேவதாஸ், முகல் இ அசாம், கங்கா ஜமுனா ஆகிய படங்கள் சக்கை போடு போட்டன. கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டு கொய்லா என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.

1991-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதும் இந்த ஆண்டு பத்மவிபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது.
1997-ம் ஆண்டு பாகிஸ்தான், தனது நாட்டின் உயரிய விருதான நிஷான் இ இமிதியஸ் விருதை வழங்கி திலீப்குமாரை கவுரவித்தது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!