வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (12/12/2015)

கடைசி தொடர்பு:15:06 (12/12/2015)

பீப் பாடல்: - சிம்பு, அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கத்தினர் போலீசில் புகார்; ஆர்ப்பாட்டம்!

கோவை: பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக கோவையில் காவல்துறையில்  புகார் அளித்த மாதர் சங்கத்தினர், சிம்பு - அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப கட்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் துவங்குகிறது அந்த பாடல். பீப் ஒலி கொண்டு அந்த வார்த்தைகளை மறைக்க முயன்றிருந்தாலும், வார்த்தைகள் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும் அளவில்தான் பாடல் உள்ளது. இணையத்தில் பெரும் எதிர்மறை விமர்சனங்களை இந்த பாடல் சந்தித்து வரும் நிலையில், இதை எழுதி பாடியதாக சிம்புவும், இசையமைத்ததாக அனிருத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் இணைய வாசிகள்.

இந்நிலையில், பெண்களை மிக அவமானப்படுத்தியுள்ள சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் ஜனநாயக மாதர் சங்கத்தினர்.

சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து இது தொடர்பாக புகாரினை அளித்தனர்.

"திட்டமிட்டு பெண்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாடல் முழுக்க கேவலமான வரிகள் உள்ளது. தொடர்ச்சியாக நடிகர் சிம்புவின் படங்களிலும், பாடல்களிலும்  பெண்களை அவமானப்படுத்தி பேசுவதும், பாடுவதும் தொடர்கிறது. சமீபத்தில் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்வதும் என பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தூபம் போடும் வேலையாக இந்த பாடல் அமைந்துள்ளது. பெண்களை கேவலமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, திட்டமிட்டு இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது. இப்பாடலை உடனே தடை செய்ய வேண்டும். மேலும் இப்பாடலை எழுதி, பாடிய சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது பெண்களை ஆபாசமாக பாடியதற்காகவும், பெண்களின் உடலுறுப்பைச் சொல்லி அவமானப்படுத்தியதற்காகவும் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் கூறி உள்ளனர்.

தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகம்  முன்பு, சிம்பு, அனிருத் படங்களை கிழித்தெறிந்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை மாதர் சங்கத்தினர் காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

-ச.ஜெ.ரவி
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்