வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (14/12/2015)

கடைசி தொடர்பு:13:08 (14/12/2015)

ஆபாச வார்த்தை பாடல்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்: கங்கை அமரன்

ஈரோடு: ஆபாச வார்த்தைகள் அடங்கிய பாடல்களை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கைஅமரன் தெரிவித்துள்ளார்.

பாரதியார் பிறந்த நாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில்  கங்கைஅமரன் பங்கேற்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
" பாரதியார் 'ஓடி விளையாடு பாப்பா' என்கிற குழந்தைகள் பாடல் முதல் தேச பற்றுடைய பாடல்கள் வரை அனைத்துத் தளங்களிலும் எழுதி உள்ளார். பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என இன்று வரை எந்த ஒரு கலைஞரும் பாரதியாரின் வழியைப் பின்பற்றி பாடல்களை எழுதி வருகிறார்கள்.

பாரதியார் தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பற்றை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாடல்களை எழுதி உள்ளார்.

வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களின் வீட்டிற்கு செல்லும்போது அவர்களுடைய குழந்தைகளுக்குத் தமிழ் பேச தெரிவதில்லை. இது அந்தக்  குழந்தைகளின் தவறு கிடையாது. அவர்களுடைய பெற்றோர்கள்தான் தமிழின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் ஆபாசமாக ஒரு பாடல் வெளிவந்து உள்ளதாக கோவையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஆபாச வார்த்தைகள் இடம் பெற்ற பாடல்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆபாசம் மற்றும் கொச்சையான வார்த்தைகளுடைய பாடல்கள் ஒரு சில வேளையில் அனுமதிக்கப்பட்டு வெளிவந்து விடுகிறது. இதனால் வருங்காலங்களில் வெளிவரும் பாடல்களிலும் இதைவிட கொச்சையான வார்த்தைகளைப்  பயன்படுத்த வாய்ப்பாகிறது. எனவே ஆபாச பாடலை தொடக்கத்திலேயே அனுமதிக்கக்கூடாது" என்று கூறினார்.

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஜோடி உருவாக்கியதாக சொல்லப்படும் பீப் சாங், தற்போது பொதுத் தளத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்