வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (17/12/2015)

கடைசி தொடர்பு:09:16 (18/12/2015)

கடைத் தெருவின் கதைசொல்லி!

திருவனந்தபுரத்தில் வசித்துவரும் தமிழ் எழுத்தாளர்கள் பலரில் ஆ.மாதவன் முக்கியமானவர். 80 வயதைக் கடந்துவிட்ட இவருக்கு,  இந்திய இலக்கிய அமைப்பு இப்போதுதான் கதவைத் திறந்திருக்கிறது.

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்து கிடைத்தாலும் தகுதியான ஒருவருக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ந்திருக்கிறது தமிழ் இலக்கிய உலகம்.

மணலும் புனலும், கிருஷ்ணப் பருந்து, தூவானம் என பல அருமையான நாவல்களை எழுதியவர் அவர். நாதஸ்வரத்தைப் பின்னணியாக வைத்து இவர் எழுதிய சிறுகதைக்காகவே அவரைக் கொண்டாடுவார்கள்.

தந்தையின் இழப்பில் இருக்கும் ஒருவன்,  அந்த இறுதிச் சடங்கில் தந்தையின் நினைவாக நாதஸ்வரம் வாசிக்கும் ஒருவரை ஏற்பாடு செய்வான். நாதஸ்வர இசைக்குப் பதிலாக நாராசமான இசை. அவன் இசைக்கே தொடர்பில்லாதவன் என்பது தெரியவரும். அவசரத்துக்கு அவன்தான் கிடைத்தான் என்பதால் தந்தையின் சோகத்தில் அதைப் பொறுத்துக்கொண்டே வருவான். ஒரு கட்டத்தில் நடு ரோட்டில் வைத்து அவனை பின்னி எடுத்து விரட்டி அடிப்பதோடு அந்தக் கதை முடியும். அப்பட்டமான சோக நிலை அப்படியே மாறிவிடும். கதையைப் படித்துக்கொண்டிருக்கும் வாசகனுக்கு அது ஒரு விபரீத அனுபவத்தைத் தந்த சிறுகதை அது. கடைசி பத்தியில் அது ஒரு சிரிப்புக் கதையாக மாறிவிடும். ஆ.மாதவனின் எழுத்துக்கள் நம்மைப் புரட்டிப்போடக்கூடியவை.

மணலும் புனலும் என்ற அவருடைய நாவல் சற்றே அவலட்சணத்துடன் பிறந்துவிட்ட ஒரு பெண்ணின்மீது அவள் தகப்பன் கொள்ளும் வாழ்நாள் வெறுப்பைச் சொல்லும் நாவல். மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை.

திருவனந்தபுரத்துப் பின்னணியில், மலையாள வாடையும் மக்களும் கலந்துகட்டிய தனித்துவமான நடை அவருடையது. அதனால் களமும் தனித்துவமானதாக இருக்கிறது. அவர் திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். செல்வி ஸ்டோர் என்பது அதன் பெயர். இவருடைய கதைகளில் சாலை தெருவும், அதில் புழங்கும் மக்களுமே பாத்திரங்களாக வருவது உண்டு. இலக்கிய உலகில் அவரை,  'கடைத் தெருவின் கதைசொல்லி' என்பார்கள்.

ஆரம்பத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் அனுதாபியாக இருந்தவர் இவர், பின்னாளில் அரசியல் ஈடுபாட்டில் இருந்து விலகிக்கொண்டார். இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் மோகபல்லவி, கடைத்தெருக் கதைகள், காமினிமூலம், மாதவன் கதைகள், ஆனைச்சந்தம், அரேபியக்குதிரை, ஆ.மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு ஆகியவை இலக்கியத் தரத்துக்குச் சான்றாக விளங்குகின்றன.

விருதுகளுக்கு அப்பாற்பட்ட எழுத்துச் செயல்பாடுகள் இவருடையது. தமிழ் நாட்டைவிட்டு விலகி இருப்பதானாலேயே என்னவோ, இவருக்கான அங்கீகாரங்களும் விருதுகளும் விலகியே இருந்தன.

எழுத்தாளர் ஜெயமோகன் நடத்திவரும் இலக்கிய அமைப்பின் மூலம் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ இவருக்கு வழங்கப்பட்டது.  'இலக்கியச் சுவடுகள்' என்ற இவருடைய கட்டுரைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துவியாபாரம் செய்யத் தெரியாத வியாபாரி இவர். வாழ்த்துவோம்!

-தமிழ்மகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க