இப்படியும் ஒரு மனிதர்... சென்னையில் சாக்கடையில் இறங்கி குப்பையை அகற்றும் பெல்ஜியம் நாட்டுக்காரர்!

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்ட பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழுவினர், தற்போது சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த பீட்டர், பாலவாக்கத்தில் தற்போது வசித்து வருகிறார். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டருக்கு, இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்பை (மலையேறும் குழு) உருவாக்கினார். தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள் நாடு முழுவதும் உள்ள மலை பிரதேசங்களில் பயணம் செய்து, அங்குள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பெல்ஜியம் நாட்டை போன்று சென்னை நகரையும் தன்னுடைய தாய் வீடாக பார்த்த வந்த பீட்டர், மழை வெள்ளத்தால் சென்னை நகரம் தத்தளித்தபோது, தன்னுடைய குழுவை அழைத்துக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார். பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 130 பேரை பத்திரமாக மீட்டார்.
 

மேலும் படங்களுக்கு....

 

அதுமட்டுமின்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமையல் பொருட்கள், பாத்திரங்கள், துணி வகைகள், மருந்து, மாத்திரைகள், கொசுவர்த்தி சுருள், மெழுகுவர்த்தி உள்பட 25 பொருட்கள் அடங்கிய பைகளை 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

தற்போது, பீட்டர் தலைமையிலான குழு சென்னை நகர் முழுவதும் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் இறங்கி உள்ளது. ஆழ்வார்ப்பேட்டை, எம்.ஆர்.சி.நகர், காந்திநகர், கோட்டூர்புரம், முகப்பேர், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பீட்டர், சாக்கடையில் இறங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி வருவதோடு, குப்பைகளை கைகளால் அள்ளி, அதனை மிதிவண்டிகளில் ஏற்றி அகற்றி வருவது சென்னை மக்களை வியப்படைய செய்துள்ளது.

இதனிடையே, வெள்ளத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டருக்கு பாராட்டு சான்றிதழை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார். இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் கலந்து கொண்டார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!