கந்துவட்டி காரர்களின் பாலியல் தொல்லை... கனல் கக்கும் ரோஜா!

மீபத்தில்  ஆந்திர சட்டமன்ற சபாநாயகர், "முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொச்சைப்படுத்தி பேசியதால் நடிகை ரோஜா  சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது, அவரை ஒரு வருஷத்துக்கு சஸ்பென்ட் செய்கிறோம்" என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

மறுநாள் ஆந்திர அசெம்ப்ளிக்குள் ரோஜா காலடி வைக்க,  போலீஸார் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தபோது தள்ளுமுள்ளு நடக்க,  மயக்கம் போட்டு விழுந்தார், ரோஜா.

என்னதான் நடந்தது என்பது குறித்து ரோஜாவிடம் பேசினோம்...

'' சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்ததற்கு ஆதாரமான காப்பியை வாங்குவதற்கு சட்டசபைக்கு போனேன். வழக்கமாக சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.எல்.ஏ-க்கள் அசெம்ளிக்குள் நுழைய மாட்டார்கள். அந்தந்த கட்சிக்கென்று தனியாக ஆபீஸ் இருக்கிறது. அதுபோல நானும் சட்டசபை வளாகத்துக்குள் இருக்கிற எங்களது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு செல்லத்தான் போனேன். ஏதோ அவைக்குள் செல்வதாக தவறாக கருதி என் மீது, மிகக் கொடூரமாக போலீஸார் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். என்னை கைது செய்த போலீஸாரிடம்,  'நான் ஒன்றும் குற்றவாளியல்ல...காவல் நிலையத்துக்கு நானே என் காரில் வருகிறேன்' என்று சொல்லியும், வலுக்கட்டாயமாக என்னை நெருக்கி, தள்ளுமுள்ளு நடத்தி,  போலீஸ் வேனில் ஏற்றும்போது எனக்கு மயக்கம் வந்துவிட்டது.

திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட என்னை,  ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு பதில் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துப்போய் டார்ச்சர் செய்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தலைவர் ஜெகன்கோகன் ரெட்டி என்னைப் பார்க்க ஸ்டேஷனுக்கே வந்துவிட்டார். காவல்துறை அதிகாரிகளிடம் கடுமையாக வாதாடி என்னை மீட்டார். அதன்பின் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றேன்.

ஆந்திர சட்டசபையில் சந்திரபாபு நாயுடு குறித்து நான் சொன்ன வார்த்தையை தவறாக புரிந்து கொண்டு,  வேண்டுமென்றே என்னை சஸ்பென்ட் செய்ய திட்டமிட்டனர். ஏனென்றால் விஜயவாடாவின் ஒரு பகுதியில் ஒரு சிலர் கந்துவிட்டிக்கு பணத்தை வசூலித்து வருகின்றனர்.

கடன் வாங்கியவர்கள் சிலசமயம் பணத்தை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால்,  கடன் வாங்கியவரின் மனைவியை அல்லது மகளை கந்துவட்டிக் காரர்கள் மிரட்டி அழைத்துச் சென்று வருகின்றனர். தங்கள் வீட்டுக்கு இழுத்துச் சென்ற பெண்ணை பாலியல் தொல்லைக் கொடுத்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி பலாத்காரம் செய்து வருகின்றனர்.

இப்படி தவறு செய்பவர்களை தட்டிக்கேட்கச் சென்ற நான், அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஏனென்றால் கந்துவட்டி வசூலிப்பவர்கள், பெண்களை பலாத்காரம் செய்பவர்கள் எல்லோருமே தெலுங்கும் தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள், கவுன்சிலர்கள் என்று பொறுப்பு வகிப்பவர்கள்.  அவர்கள்மீது வழக்கு தொடுக்க,  சட்டசபையில் அதுகுறித்து பேசுவதற்கு  திட்டமிட்டு இருந்தேன். அப்படி நடந்தால் அவர்கள் கட்சியின் மானம் கப்பலேறிவிடும் என்று  என் எண்ணத்தை தடுக்கும் பொருட்டு, முன்கூட்டியே திட்டமிட்டு என்னை  சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்" என ஆவேசமாக சொல்லி முடித்தார். 
 
- எம். குணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!