வெள்ள நிவாரணத்திலும் குளறுபடி... கொதி கொதிப்பில் சென்னைவாசிகள்!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதில் பெரும் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  இதனால், பெயர்கள் விடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் நேரடி நிவாரணம் தேடி முகாமிட்டுள்ளனர். ஏன் இந்த குளறுபடி, என்ன நடக்கிறது? விசாரித்தோம்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த இரண்டு வாரங்களாக நேரடியாகத் தேடிச் சென்ற ஆட்சியர் அலுவலக  ஊழியர்கள்,  விண்ணப்ப படிவத்தில் தகவலைப் பூர்த்தி செய்து,  அதை ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி  வந்தனர். பொதுமக்களிடம் நேரடியாக விபரங்களை  குறிப்பெடுக்கும்போது, விண்ணப்பப் படிவங்களின் எதிர்ப்பக்கத்தில் குடும்ப விபரம் குறித்து எழுதாமல், படிவத்தின் பின்பக்கமாக  அதை குறிப்பில் கொண்டு வந்து விட்டனராம்.  நூற்றுக்கு ஒரு படிவம் என்ற கணக்கில் மட்டும், படிவங்களை சரியான முறையில் 'எதிர்ப்பக்கம்' குறித்துள்ளனர். இதன் பின்னர், இவைகளை சரியாக ஆய்வு செய்யாமல், இந்த குறிப்புகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் கணினியில் இந்த தகவல்களை பதிவு செய்ய நியமிக்கப்பட்ட ஊழியர்கள், முன்னரே செய்திருந்த ஒழுங்கு முறைப்படி 'எதிர்ப்பக்கம் குறிப்பு உள்ளதை' மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு விட்டு  (பின்புறமாக பூர்த்தி செய்திருந்த பிற மனுக்களை) எஞ்சியவைகளை  அப்படியே, "போதுமான விபரம் இல்லை" என்ற காலி பெட்டிகளில் போட்டு விட்டனர். வேலை முடிந்ததும் (?) மொத்த மனுக்களையும் எண்ணிக்கை கணக்கில் பரிசீலித்ததில் விபரம் இல்லை என்று வீசப்பட்ட மனுக்களே காலி பெட்டிகளில் அதிகளவில் நிரம்பியுள்ளது. இதனால், குழப்பமடைந்த சில ஊழியர்கள் காலி பெட்டிகளில் கிடந்த மனுக்களை மீண்டும் 'தீர' சரி பார்த்த போதுதான் அவைகளின் பின்பக்கம் குடும்ப விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது தெரிந்திருக்கிறது.

ஒரேயொரு நல்ல விஷயம் என்னவென்றால், வீசப்பட்ட மனுக்களின் பின்பக்கத்தில் மனுக்களுக்கு உரியவர்களின் செல்போன் எண் குறிக்கப்பட்டிருந்ததுதான். அதை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து  போனில் தகவலைக் கேட்டு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கும் பொருட்டு, விபரங்களை உறுதிப்படுத்தி வருகின்றனர்.  இதுதான் நமக்குக் கிடைத்த தகவல். இது இப்படியிருக்க...

"வெள்ள நிவாரண கணக்கெடுப்பின் படி உங்கள் பெயர்,  வங்கியின் விவரத்தோடு பொருந்தவில்லை. கணக்கு வைத்திருப்பவர் பெயர், வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண் ஆகிய விவரத்தை இதே கைபேசியிலிருந்து 98401 31067  என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் எஸ்.எம்.எஸ். அனுப்பவும். இப்படிக்கு (எந்த மாவட்டம் என்று கூட அந்த வாட்ஸ் அப் குறிப்பில் இல்லை) மாவட்ட ஆட்சியர்" என்று பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ். தகவல் பரவலாக போய்க் கொண்டிருக்கிறது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசி விபரம் பெற முயன்றோம். ஆனால், மணிக்கணக்கில் 'லைன் - பிசி' என்றே தகவல் வருகிறது. மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயன்றோம். அவர் முக்கிய 'மீட்டிங்கில் இருப்பதாக' செல்போனில் வந்த குரல் நம்மிடம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடம் இது பற்றி கேட்டோம். "நீங்கள் செல்லும் தகவல் உண்மைதான். ஆனால், யார் பணமும் எங்கும் போய் விட வில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரத்தை முறைப்படி அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சொல்லும் படிவம் குறித்த குழப்பத்தை விரைந்து சரி செய்யத்தான் கூடுதலாக இங்கே ஆட்களைப் போட்டு வேலை நடக்கிறது. பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஏராளமான 'சிம்' கார்டுகளை வழங்கியுள்ளனர்.  நீங்கள் குறிப்பிடும் இந்த எண், அதில் ஒன்றா என்று சரிபார்த்து விட்டு சொல்கிறோம்" என்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேரடியாக அளிக்கின்ற விளக்கம் மூலம்தான்  பொதுமக்களின் குழப்பம் விலகும். இந்த புத்தாண்டில் ஓரளவாகினும், 'உதவிப்பணம்' என்ற சிறு சந்தோஷம் அவர்களின் முகங்களில் மலரும். இந்த குழப்பம் என்பது சென்னையில் மட்டும்தானா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

மக்களின் குழப்பம் தீர்க்க, 'அவர்கள்' உதவி செய்வார்களா...  அவர்கள் செய்வார்களா?

-ந.பா.சேதுராமன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!