வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (05/01/2016)

கடைசி தொடர்பு:18:30 (05/01/2016)

சென்னை பள்ளிகளை கலங்கடித்த வெடிகுண்டு வதந்தி... பதறி ஓடி வந்த பெற்றோர்கள் (வீடியோ)

சென்னை: தென்சென்னை பகுதியில் உள்ள அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மர்மநபர்களால்  வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானதை  தொடர்ந்து, மாணவர்கள் உடனடியாக பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அடையாறு, திருவான்மியூர்,ஈஞ்சம்பாக்கம், மந்தைவெளி மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக  வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.
இதனையடுத்து  தங்களது குழந்தைகளை  பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் தகவல் பரவியதால் பள்ளிக்குழந்தைகளும், பெற்றோர்களும் பீதியடைந்தனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து அடையாறு திருவான்மியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். 

 சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோவளம் கடற்கரை பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் 6 பள்ளிகள் செயல்படுகின்றன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். வழக்கம் போல இன்று காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளி செயல்படத் தொடங்கியதும் கேளம்பாக்கம் போலீஸார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பள்ளி நிர்வாகத்திடம் வெடிகுண்டு குறித்த தகவலை தெரிவித்தனர். இதைக்கேட்டு பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸார் சா
துர்யமாக செயல்பட்டு மாணவர்களை அவசர அவசரமாக பள்ளியை விட்டு வெளியேற்றினர். முதலில் வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள் வேன் மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதே நேரத்தில் உள்ளூர் மாணவர்களையும் வகுப்பறையை விட்டு வெளியேற ஏற்பாடு செய்தனர். இதற்கிடையில் வெடிகுண்டு குறித்த தகவல் பெற்றோர்களுக்கு தெரியவர அவர்கள் பள்ளிக்கு விரைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் கூறுகையில், "போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு காலை 9 மணி அளவில் பள்ளிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் தகவல் வந்தது. அங்கிருந்து எங்களுக்கு தகவல் வந்ததும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டோம். காஞ்சிபுரத்தில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். 3 மணி நேரமாகியும் அவர்கள் சம்பவ இடத்துக்கு இன்னும் வந்து சேரவில்லை. சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்திருந்தால் கூட ஒரு மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து இருக்கலாம். அவர்கள் வந்து சோதனை செய்த பிறகே வெடிகுண்டு குறித்த தகவல் உண்மையா என்பது தெரியவரும். இதற்கிடையில் போன் மூலம் தகவல் தெரிவித்தவரின் விவரம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது" என்றனர்.

வெட்டுவாண்கேணியில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இதுபோல் வெடிகுண்டு புரளி கிளம்ப பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக நீலாங்கரை இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கரன் தலைமையில் போலீஸார் பள்ளிக்கு வந்தனர். இது வதந்திதான் என்று எடுத்துச் சொன்னபோதும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்போதே தங்களுடன் அனுப்ப வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று பிடிவாதமாக நின்றனர். இதைத் தொடர்ந்து முதலில் தொடக்கப்பள்ளி மாணவிகளும், பின்னர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெற்றோர்களும் மாணவிகளும் திரண்டு சென்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. வெட்டுவாண்கேணி பள்ளியிலிருந்து மாணவிகளை பெற்றோர் அழைத்துச் செல்வதைக் கேள்விப்பட்டு நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதியிலும் பெற்றோர் பள்ளிகளை முற்றுகையிட, அங்கும் மாணவ- மாணவிகளை அனுப்பி வைத்தனர்.

பின்னணி தகவல்கள்

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் 'வெடிகுண்டு மிரட்டல்'  பற்றி போலீஸ் தரப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டக் கல்வித்துறை வட்டாரத்திலும்  விசாரித்தோம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனம் சார்பில் ஏராளமான நடுநிலை, மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இவர்களுக்கு சொந்தமாக சென்னையை ஒட்டியுள்ள கேளம்பாக்கத்திலும் ஒரு பள்ளி உள்ளது.

இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டறையை தொடர்பு கொண்டு பேசிய மர்மக்குரல்,  "கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளி உள்பட, செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும்  அனைத்து பள்ளிகளையும் வெடி குண்டு வைத்து  தகர்க்கப் போகிறோம்" என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளது.

போன் மிரட்டலைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூம் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தலைமையில் போலீசார், கேளம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளிக்கு வெடிகுண்டு ஆய்வு நிபுணர்களுடன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வில் குண்டுகள் ஏதும் சிக்க வில்லை.

பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதால்,  போலீசார் வந்துள்ளனர் என்ற தகவல் ஸ்பாட்டுக்கு போலீசார் போவதற்கு முன்னரே போய் சேர்ந்து விட்டதால் அங்கே பிள்ளைகளை அழைத்துச் செல்ல மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு விட்டனர்.

போலீசார் அவர்களுக்கு ஆறுதல் கூறி,  அங்கிருந்து பாதுகாப்பாக  அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் சென்னை மயிலாப்பூர், திருவள்ளூர் போன்ற இடங்களில் இயங்கிவரும் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவன பள்ளிகளுக்கும் இந்த தகவல் போய்விட, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் 7 பள்ளிகளுக்கும் பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

கூடுதல் கல்விக் கட்டணத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது தேர்வுக்குப் பயந்த மாணவர்கள் இந்த மிரட்டல் வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 'இப்போதைக்கு தீவிரவாத மிரட்டல் போன்ற விஷயமாக இதைக் கருதவேண்டியது இல்லை' என்பதையும் போலீசார் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே 'தொடர்மழை' கொடுத்த விடுமுறை போதாதா?

காவல்துறை விளக்கம்

இதனிடையே வாட்ஸ் அப்பில் வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ள சென்னை காவல்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவளம் தனியார் பள்ளிக்கு மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்துள்ளது.


-எஸ்.மகேஷ், ந.பா.சேதுராமன்

படங்கள் & வீடியோ: எம்.செய்யது முகம்மது ஆசாத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்