பரம விரோதியிடம் காட்டிய பாசம் : நாய்குட்டி மீட்கப்பட்டதால் சோகத்தில் குரங்கு!

டந்த சில நாட்களுக்கு முன், ஈரோடு முத்து வேலப்பர் பகுதியில் நாய்க்குட்டி ஒன்று தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பெரிய நாய்கள் அந்த நாய்குட்டியை  விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தன.  என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த நாய்குட்டிக்கு ஆபத்பாந்தவனாய் வந்தது... அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த பெரிய குரங்கு. நாய்கள் கூட்டத்தின் மேல் திடீரென்று பாய்ந்த அந்த குரங்கு,  நாய்குட்டியை பெரிய நாய்களிடம் இருந்து காப்பாற்றி தன்னிடம் வைத்துக் கொண்டது.

இதனை பார்த்த பொதுமக்களுக்கோ ஒரே ஆச்சர்யம். இரண்டு இனமும் பரம விரோதிகள். குரங்கு எப்படி நாய்குட்டியை பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணம் அந்த பகுதி மக்களிடையே ஏற்பட்டது. நாய்குட்டி மீது கொண்ட பரிதாபத்தினால், அந்த பகுதி மக்கள் பால், பழம் போன்றவற்றை குரங்குக்கும் வைத்தனர். அதனை இரண்டும் பகிர்ந்தும் உண்டன, பருகியும் கொண்டன.

எப்படியும் சிறிது நேரத்தில் குரங்கு,  நாய்குட்டியை விட்டு விடும் என்று அந்த பகுதி மக்கள் நம்பினர். ஆனால் நாய்குட்டியை பிள்ளை போல பார்க்கத் தொடங்கியது குரங்கு. நாய் குட்டிய தூக்கிக் கொண்டு மரத்திற்கு மரம் தாவவும் செய்தது.  இதனை பார்த்த அந்த பகுதி மக்களின்  மனமோ பதை பதைத்தது. வழக்கமாக குரங்கு மரத்திற்கு மரம் தாவும் போது அதன் குட்டி,  குரங்கின் வயிற்று பகுதியை கெட்டியாக பிடித்துக் கொள்ளும். ஆனால் இங்கே பெரிய குரங்கோ ஒரு கையில் நாய்குட்டியை பிடித்துக் கொண்டு மரத்திற்கு மரம் தாவியது.

இப்படி சில நாட்கள் ஈரோட்டில் அந்த பெரிய குரங்கு, நாய்குட்டியுடன் சுற்றிக்கொண்டிருந்தது. வனத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து குரங்கை கூண்டு வைத்து பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.  ஆனால் அந்த புத்திசாலி குரங்கோ, கூண்டை சுற்றி சுற்றி வந்ததே தவிர கூண்டுக்குள் போகவில்லை. வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கிடையே நான்கு நாட்கள் குரங்கின் பாதுகாப்பில் இருந்ததால், நாய்குட்டிக்கும் அதனுடன் நல்ல உறவு உருவாகியிருந்தது. நாய்குட்டிக்கு பேன் பார்ப்பது, உணவு கிடைத்தால் நாய்குட்டிக்கு கொடுப்பது என குரங்கு பாசத்துடன் இருந்தது. அத்துடன் யாராவது வந்து விட்டால் நாய்குட்டியை தூக்கிக் கொண்டு ஓடி விடுவது என்று குரங்கார் போக்கு காட்டிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே குரங்கு பயிற்சியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அப்போதாவது குரங்கை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது வனத்துறையினர் திட்டம். அவர் வந்தார்...  குரங்கு பார்க்கும் வகையில் மிகப் பெரிய கண்ணாடியை வைத்தார். கண்ணாடியை கண்டால், அதனை பார்த்து  லயிப்பது குரங்கின் குணம். அந்த சமயத்தில் நாய்குட்டியை லவட்டிக் கொண்டு போய் விடலாம் என்பது குரங்காட்டியின் திட்டம். ஆனால் நடந்ததோ வேறு. கண்ணாடியை பார்த்து பல்லிளித்து விட்டு குரங்கு நடையை கட்டி விட்டது. குரங்காட்டிக்கும் இந்த இடத்தில் ஏமாற்றம்.

ஐந்தாவது நாள்தான் செம சுவாரஸ்யம். குரங்கை பிடிக்க ஒரு பக்கம் போலீஸ் படை, இன்னொரு பக்கம் வனத்துறையினர், மறுபுறம் பொதுமக்கள்.  இன்னொரு  பக்கத்தில் கையில் சுருக்கு கயிற்றுடன் குரங்காட்டி. இப்படி நான்கு பக்கமும் சூழப்பட்ட  குரங்கார், கழுத்தில் சுருக்கு கயிறு போட்டு பிடிக்கப்பட்டார். இந்த சமயத்தில் நாய்குட்டியை பாய்ந்து இன்னொருவர் எடுத்துக் கொள்ள, அது பத்திரமாக மீட்கப்பட்டது.

அதனை வளர்க்க ஆசைப்பட்ட ஒரு இளைஞரிடம் நாய்குட்டி ஒப்படைக்கப்பட்டது. குரங்கு விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது நாய் குட்டியை பிரிந்த சோகத்தில் குரங்கு இருப்பதால்,  மக்களை தாக்கும் என்ற அச்சம் உள்ளது. இதனால் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள குரங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு அந்த குரங்கை பிடித்து கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அன்பு யார் மீது எப்போது பொத்துக் கொண்டு வருமோ அந்த கடவுளுக்கே கூட தெரியாது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!