வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (08/01/2016)

கடைசி தொடர்பு:13:12 (08/01/2016)

கோவில் யானைகள் முகாமும்... சில சுவாரஸ்யங்களும்!

டந்த 2003-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் யானைகள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் முதல் ஜனவரி வரை யானைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் கோவில் யானைகள் மதம் பிடித்து அட்டகாசத்தில் ஈடுபடுவது அதிகரித்ததால், இந்த திட்டத்தை அப்போதையை அதிமுக அரசு கொண்டு வந்தது.

ஆண் யானைகளுக்கு கண்கள் அருகே வெளியே தெரியாத அளவில் இருக்கும் சிறிய துவாரத்தில் இருந்து மத நீர் வடியும். அந்த காலக்கட்டத்தில் ஆண்யானைகளை பட்டினி போட்டு கட்டுக்குள் கொண்டு வருவார்கள். தமிழகத்தில் சுசீந்தரம் தாணுமாலையன் கோவிலில் கோபாலன் என்ற ஆண் யானை இருந்தது. தொடக்க காலத்தில் இந்த ஆண் யானையும் முகாமில் பங்கேற்று வந்தது. தற்போது அது இறந்து விட்டது.
கோவில்களில் சிமெண்ட் தரைகளில் படுத்தும், வெக்கையிலும் உழழும் இந்த யானைகளுக்கு, அவற்றுக்கு பிடித்த சீதோஷ்ண நிலையில் 48 நாட்கள் இருப்பது, அதாவது ஒரு மண்டல காலம் வசிப்பது உற்சாகத்தை அளிக்கும் என்ற நோக்கத்தில், முதுமலையில் இந்த முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனால் கடந்த 2003-ம் ஆண்டு முதல் முதுமலை தெப்பக்காட்டில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
யானைகள் முகாம் தொடங்கப்பட்ட காலத்தில், அவற்றை லாரியில் ஏற்றுவதற்கு பாகன்களும் உதவியாளர்களும் கடும் சிரமப்பட்டனர். தற்போது லாரியை கொண்டு வந்து நிறுத்தினாலே யானைகள் ஏறிக் கொள்வதற்கு பழகிக் கொண்டன.
முதல் யானைகள் முகாமில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராசியான எண்ணான கூட்டுத் தொகை
9 வரும் வகையில், 63 யானைகள் பங்கேற்றன. யானைகளை வைத்து முதல்வர் கஜபூஜை நடத்தியதாக வதந்தியும் கிளம்பியது உண்டு.
முதல் 4 ஆண்டுகள் முதுமலையில்தான் இந்த முகாம் நடத்தப்பட்டது. சலசலத்து ஓடும் மாயாற்றில்
யானைகள் உற்சாகமாக குளியல் போட்டன. முதுமலையில் முகாம் நடந்த காலக்கட்டத்தில் அங்குள்ள, லங்கூர் குரங்குகள் முகாமுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தன. யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை திருடியும் , யானைகள் மீது கல் எறிந்தும் சேட்டைகளில் ஈடுபட்டன. இந்த குரங்குகளை கண்டு, குழந்தைகள் போன்ற கோவில் யானைகள் பயப்படுவதும் உண்டு.

யானைகள் தும்பிக்கையால் புற்களை பறித்து, காலால் மண்ணை தட்டி அவற்றை உண்பது வழக்கம். கோவில் யானைகளுக்கு இந்த வழக்கம் பழக்கமில்லை. ஆனால் தற்போது முகாமில் பங்கேற்கும் யானைகள், புற்களை பறித்து உண்ண பழகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2006-ம் ஆண்டு வாக்கில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 5 ஆண்டுகள் யானைகள் முகாம் நடத்தப்படவில்லை. தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் யானைகள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஊட்டி போன்ற மலை பிரதேசத்தை கடந்து முதுமலைக்கு யானைகளை கொண்டு செல்வதில் சிரமம் இருந்ததால், தற்போது யானைகள் முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாவானி ஆற்றங்கரை ஓரம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமின் போது யானைகளுக்கு விஷேச உணவுகள் வழங்கப்படுகின்றன. அஷ்ட சூரணம், சியோவான்பிராஷ், பயோபூஸ்ட் மாத்திரை, லிவ் 52 மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதில் லிவ் 52 மாத்திரை, யானைகளின் கல்லீரல் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவும்.
தமிழக மற்றும் கேரளாவின் மிகச்சிறந்த கால்நடை மருத்துவர்கள், யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிப்பார்கள்.
ஊட்டச்சத்து மிகுந்த பேரீச்சை, அவல், கேரட், பீட்ருட் உணவுகளும் யானைகளுக்கு வழங்கப்படும்.
தற்போது மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில் 30 யானைகள் பங்கேற்றுள்ளன. ரமேஸ்வரம் மற்றும் ஸ்ரீவில்லிப்புதூர் கோவில் யானைகள், அந்த கோவில்களில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் முகாமில் கலந்து கொள்ளும். இந்த முகாமில் பங்கேற்றுள்ள யானைகளில் மதுரை கள்ளழகர் கோவில் யானை சுந்தரவள்ளி, திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை ஆகியவற்றுக்கு வயது 8 மட்டுமே. மயிலாடுதுறை அபயாம்பிகாவுக்கு வயது 48. இந்த முகாமில் பங்கேற்றுள்ள அதிக வயது கொண்ட யானை இதுதான்.
முகாமை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. எனினும் மேட்டுபாளையத்தில் நேற்று பவானி ஆற்றில் கோவில் யானைகள் குளித்துக் கொண்டிருந்த போது காட்டு யானைகள் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை வனத்துறையினர் வெடி வெடித்து விரட்டியுள்ளனர். இதன் காரணமாக தற்போது கோவில் யானைகளுக்கு பவானி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமில் யானைகள் குளிக்க ஸ்பெஷல் ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பங்கேற்கும் ஸ்ரீரங்கம் ஆண்டாள் கோவில் யானை, காலையில் எழுந்ததும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டது. சில குட்டி யானைகள் மவுத் ஆர்கன் வாசித்து அசரச் செய்வதும் உண்டு. ஒரு குட்டி யானை எப்போதும் கால்பந்துடன்தான் இருக்கும்.
கோவில் யானைகளுக்கு முகாம் நடத்தப்படும் இதே காலக்கட்டத்தில்தான், முதுமலை தெப்பக்காடு , பொள்ளாச்சி டாப்ஸ்லிப், கோவை சாவயல் முகாமில் கும்கி உள்ளிட்ட வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அந்த யானைகளுக்கு எந்த வேலையும் அளிக்கப்படமாட்டாது. முதுமலை, டாப்ஸ்லிப்பில் யானை சவாரியும் ரத்து செய்யப்படும்.

தமிழகத்தில் மீண்டும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால், யானைகள் முகாம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.


நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்