வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (11/01/2016)

கடைசி தொடர்பு:12:49 (11/01/2016)

கோயில்களில் ஆடை கட்டுப்பாடுக்கு இடைக்கால தடை: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி

மிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு தொடர்பான  இந்து சமய அறநிலையத் துறை  உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது. 

தமிழக கோயில்களில் பாரம்பரிய உடைகளை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுபாடு ஏற்கனவே நடைமுறையில்  உள்ளது. ஆனால், கோயிலுக்கு வரும் சில ஆண் பக்தர்கள் டிரவுசர், டிராக் பேன்ட், பெண் பக்தர்கள் ஜீன்ஸ், டி சர்ட், டாப், லெக்கிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளில் வருகின்றனர்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத் துறை  கடந்த மாதம் ஒரு சுற்றறிக்கையை அனைத்து கோயில்களுக்கும் அனுப்பியது.



அதில், "திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய உடைகள் அணிந்து வர  வேண்டும். ஆண்கள் வேஷ்டி, சட்டை, பைஜாமா, குர்தாவும் பெண்கள் புடவை, தாவணி, சுடிதார் அணிந்து வருவது கலாசாரமாகும். மற்ற உடைகளை அணிந்து வருவதை  பக்தர்கள் தவிர்க்க வேண்டும். உடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டும். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கட்டுப்பாட்டை  அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்  கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர்  கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர்  கோயில், வடபபழனி மற்றும் பழனி  முருகன் கோயில்,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட  பெரும்பாலான  பெரிய கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு  பலகைகள்  தமிழிலும், ஆங்கில மொழிகளிலும் வைக்கப்பட்டன.

கடந்த 1ம் தேதி முதல் இந்த ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. இந்த கட்டுப்பாட்டிற்கு பக்தர்கள் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோயில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஹரிதா, சுகந்தி ஆகிய பெண்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆடை கட்டுப்பாடு தனி மனிதரின் உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது" என்று மனுதாரர்  தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில், கோயிலில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்க கூடாது என்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், கோயில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, இது தொடர்பாக பதில் அளிக்கும் படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்