வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (12/01/2016)

கடைசி தொடர்பு:14:47 (12/01/2016)

ஆஸ்பத்திரியா? அப்படினா என்னவென்று கேட்ட 113 வயது மூதாட்டி மரணம்!

இன்றைய காலத்தில் மனித பிறப்பே மருத்துவமனையிலிருந்துதான் துவங்குகிறது. எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்கு ஓடச்சொல்லி நோய்கள் நம்மை துரத்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், தருமபுரி மாவட்டத்தில்  கிருஷ்ணம்பாள் என்கிற மூதாட்டி, மருத்துவமனைக்கே செல்லாமல்  113 ஆண்டு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

தருமபுரி மாவட்டம், சின்ன மாட்லாம்பட்டியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மனைவியான கிருஷ்ணம்பாள், 1902ம் ஆண்டு பிறந்திருக்கிறார். முனுசாமிக்கும், கிருஷ்ணம்பாளுக்கும் சரஸ்வதி என்ற ஒரே மகள். 1979ம் ஆண்டே முனுசாமி இறந்துவிட, கிருஷ்ணம்பாள் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்து நேற்று மறைந்திருக்கிறார். கிருஷ்ணம்பாளின் மகளான சரஸ்வதிக்கு இரண்டு மகன்கள் பிறந்து, அந்த இரண்டு மகன்களுமே பேரக்குழந்தைகளோடு  தாத்தாவாகியிருக்கும் சூழலில், கொள்ளு பேரன், பேத்தி, எள்ளு பேரன், பேத்தி வரைக்கும் பார்த்துவிட்டு கண் மூடியிருக்கிறார் கிருஷ்ணம்பாள்.

கிருஷ்ணம்பாளின் பேரனான வெங்கடாச்சலம், "எங்க பாட்டி இதுவரைக்கும் அஞ்சு தலைமுறைய பாத்துட்டு போயிருக்காங்க. ஆரம்பத்துல இருந்தே விவசாய வேலைதான் பாத்துருக்காங்க. எங்க அம்மாவை கஷ்டப்பட்டு வளத்து கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க. எங்க அம்மாவுக்கு நானும் என் தம்பி ஜெகதீசனும் பிறந்தோம். இப்ப எங்களுக்கு பேரக்குழந்தைகள் இருக்கு. எங்க அம்மாவுக்கு 83 வயசாகுது.

எங்க பாட்டி வாழ்ந்த இந்த 113 வருஷத்துல அவுங்க ஹாஸ்பிட்டலுக்கே போனது கிடையாது. காது கேக்கல, கண்ணு தெரியல, நெஞ்சுவலி, வயித்துவலினு எதுவுமே வந்தது கிடையாது. கடைசி காலம் வரைக்கும் அவுங்க வேலைய அவுங்களாகவேதான் செஞ்சுகிட்டாங்க. சும்மாவே இருக்க மாட்டாங்க, ஏதாவது பண்ணிகிட்டே இருப்பாங்க. இப்போ கொஞ்ச நாளாதான் சாப்பிட முடியாம போய் சாப்பாடு  ஊட்டிவிடுற மாதிரி இருந்துச்சி.

ஆறிய களியும் 'டீ'யும்தான் விரும்பி சாப்பிடுவாங்க. நேற்று காலையில கூட சாப்பிட்டுதான் படுத்தாங்க, கொஞ்சநேரம் கழிச்சி பார்த்தா மூச்சு நின்னுடுச்சி. எங்க பாட்டிக்கு ஒண்ணுவிட்ட சொந்தம் அப்டி இப்டினு 117 வாரிசுகள் இருக்காங்க. அவுங்க எல்லாரையும் அழைச்சு எங்க பாட்டியை அடக்கம் பண்ணினோம். எங்க பாட்டிக்கு 109 வயசாகும்போது எல்லா சொந்தக்காரர்களையும் கூட்டி, கிடாவெட்டி விழா எடுத்தோம். எங்களுக்கு எல்லாமே எங்க பாட்டிதான். அவுங்க சேத்து வச்ச சொத்தைத்தான் இப்ப நாங்க அனுபவிச்சிகிட்டு இருக்கோம். எங்களுக்கு  எல்லாமுமாக இருந்த பாட்டி போயிட்டாங்க" என்று தழுதழுத்தார்.

-எம்.புண்ணியமூர்த்தி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்