அநீதியை தட்டிக்கேட்போம்... ஆனா அரசை... பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் டென்ஷனான கஸ்தூரி ராஜா! | kasthuriraja got tension in pressmeet on question by the reporter

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (12/01/2016)

கடைசி தொடர்பு:20:39 (12/01/2016)

அநீதியை தட்டிக்கேட்போம்... ஆனா அரசை... பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் டென்ஷனான கஸ்தூரி ராஜா!

ராமேஸ்வரம்: கங்கை அமரன் துவக்கியுள்ள கலாம் வாரியர்ஸ் அமைப்பின் துவக்க நிகழ்ச்சியில் அரசு குறித்த பத்திரிக்கையாளரின் கேள்வியால் பதட்டம் அடைந்தார் இயக்குனர் கஸ்துாரிராஜா.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ‘கலாம் வாரியர்ஸ்’ என்ற புதிய அமைப்பை இன்று தொடங்கினார். ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இதற்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த அமைப்பின் தலைவரான கங்கை அமரன், பொதுச் செயலாளர் இயக்குனர் கஸ்தூரி ராஜா, உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சி முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். கலாம் வாரியர்ஸ் அமைப்பின் நோக்கம் குறித்து முதலில் கங்கை அமரன் பேசியபின் மைக் பிடித்தார் இயக்குனர் கஸ்துாரி ராஜா.

அப்போது அவர், “ சென்னையில் வெள்ளசேதத்தின்போது அரசு வரவில்லை. அதிகாரிகள் வரவில்லை. அரசியல் கட்சிகள் வரவில்லை. இளைஞர்களும் முகம் தெரியாத மனிதர்களும் மக்களை காப்பாற்றினர். அதுபோல இளைஞர்களிடம் எழுச்சி வந்துள்ளது. இந்த இளைஞர்களின் சக்தியை எங்கள் அமைப்பு மூலம் சமூகத்தில் நிகழும் எந்த அநீதிகளையும் இனி நாங்கள் தட்டிக்கேட்போம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஒரு நிருபர், 'எல்லா அநீதிகளையும் என்றால், அரசாங்கள் செய்யும் அநீதிகளையும் தட்டிக்கேட்பீர்களா?' என்றார்.

நிருபர் கேள்வியை முடித்ததும் டென்ஷனானார் கஸ்துாரிராஜா. "ஏங்க நான் அப்படி சொன்னேனா.. ஏன் இப்படி கேட்கறீங்க..? என படபடப்புடன் கேட்க, அருகிலிருந்த கங்கை அமரன் அவரை ரகசியமாக கையை அழுத்தி நார்மலாக்க முயன்றார்.

ஆனால் கஸ்துாரி ராஜா படபடப்புடனே இருந்தார். அப்போது அருகிலிருந்த நடிகர் மயில்சாமி குறுக்கிட்டு,  "ஏங்க அதெல்லாம் இங்க கேட்டு... இப்போதே எங்க அமைப்பை ஏதோ அரசுக்கு எதிர்ப்பான அமைப்பு போல ஆக்கிடாதீங்க, எங்க அமைப்பு அரசுக்கு எதிர்ப்பான அமைப்பு கிடையாதுங்க!” என பேசி, அந்த இடத்தின் சூட்டை குறைத்தார். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

-இரா.மோகன்
படங்கள்:  உ.பாண்டி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்