வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (19/01/2016)

கடைசி தொடர்பு:15:46 (19/01/2016)

மனோபாலாவுக்கு ஜெயலலிதா போட்ட உத்தரவு!

தஞ்சாவூர்: தன்னை திட்டியவர்களையும், அதிமுகவை விமர்சிப்பவர்களை மட்டுமே கட்சிக்கூட்டங்களில்  விமர்சித்து பேச சொல்லி, ஜெயலலிதா தனக்கு உத்தரவு போட்டிருப்பதாக  அதிமுக பேச்சாளரும் இயக்குநருமான மனோபாலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்,  தஞ்சாவூரில் நடந்தது. அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  சிறப்பு பேச்சாளராக இயக்குநரும் நகைச்சுவை நடிகர் மனோபாலா கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் வைத்திலிங்கம், “ புரட்சித் தலைவர் ஒரு காங்கிரஸ் வாதியாக திகழ்ந்தவர். அண்ணாவின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். 1967-ம் ஆண்டு நடந்த விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணாவிடம் நான் 10 லட்சம் நன்கொடை தருகிறேன் என சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால் 'நீ நன்கொடை தரவேண்டாம் உன் முகத்தை காட்டு 30 லட்சம் வாக்குகள் விழும்' என சொன்னார் அண்ணா. அப்படியே செய்தார் எம்ஜிஆர். திமுக ஆட்சியை பிடித்தது. முதலமைச்சரான அண்ணா ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருகிறேன் என சொன்னார் ஆனால் முடியவில்லை. அண்ணாவால் முடியாததை அம்மா செய்கிறார். இப்போது அவர்கள் 20 கிலோ அரிசி விலையில்லாமல் தந்து இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறார்.

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தது ஏன் என்றால்,  அவர் சிறுவனாக இருந்தபோது வறுமையினால் பள்ளி செல்ல முடியவில்லை. அவரது தாயார் வீடு வீடாக சென்று குருணை அரிசி வாங்கி வந்து, கஞ்சி வைத்து கொடுப்பாராம். பட்டினியின் வலியை உணர்ந்ததால்தான் சத்துணவு திட்டத்தை கொன்டு வந்து சிறப்பாகவும் நடத்தி காட்டினார் எம்.ஜி.ஆர்

தமிழக வளர்ச்சிக்காக உழைத்தவர் புரட்சி தலைவர். ஆனால் கருணாநிதியோ தன் குடும்பத்தையும் வளமாக்கி கொண்டார்.அவருக்கு தான், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே முதல்வர் பதவியில் இருக்க வேண்டும் என்று  நினைக்கிறார். மக்களை பற்றி கவலையில்லை. கருணாநிதி, விஜயகாந்துடன் கூட்டணி வைத்தாலும், ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை” என்று முடித்தார்.

மனோபாலா பேசும்போது, “எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது தான் வாழ்ந்த கும்பகோணத்துக்கு வந்தார். அங்கு ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்க வேண்டும் என்றார். அவருடன் வந்த உதவியாளர்,  'நமக்கு எவ்வளவோ இடம் இருக்கும் போது நீங்க ஏன் அந்த வீட்டில் தங்குறீங்க?' என கேட்டார். 'நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது இந்த வீட்டினர்தான் உதவினாங்க. அதனால்தான்' என்றாராம்” என்று சொல்லிக் கொண்டே போக,  அப்போது தொண்டர் ஒருவர் அவர் காதில்,  'கருணாநியையும், ஸ்டாலினையும் திட்டி பேசுங்க' என்றார்.

“ஏம்பா, இது புரட்சி தலைவரோட பிறந்தநாள் கூட்டம். அவரை பற்றிப்பேசறேன். இப்பதான அமைச்சர் அவங்களை திட்டிட்டு கிளம்பினார். தன்னை திட்டுபவர்களையும், அதிமுகவை விமர்சிப்பவர்களையும் நீங்க விமர்சித்து பேச வேண்டும் என்றுதான் அம்மா எனக்கு உத்தரவு போட்டிருக்கிறார். திட்டங்கள், சாதனைகள் பத்தி பேச அமைச்சர்கள் இருக்காங்க” எனக் கூறி விட்டு, சம்பிரதாயமாக விஜயகாந்தையும்,  திமுகவையும் விமர்சித்துவிட்டு கிளம்பினார்

- கே.குணசீலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்