இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்கிறார் வெங்கைய்யா நாயுடு!

கன்னியாகுமரி: சர்வதேச சந்தையோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்று மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நிறுவிய ஏக் நாத்ராணடே 1968–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்த போது மண்டபம் கட்ட நான் நிதி திரட்டி கொடுத்தேன்.

அந்த விவேகானந்தர் மண்டபத்தில் இன்று நான் நிற்பது என் வாழ்நாளில் பொன் நாளாகும். இங்கு தெய்வ புலவர் திருவள்ளுவருக்கு சிலை அமைந்து உள்ளதும் பெருமைக்குரியதாகும்.

தமிழக தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர மற்ற கட்சிகள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தான். அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிக்கு மாற்றம் வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பா.ஜனதாவின் செல்வாக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும்.

நாட்டின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கே பெட்ரோல், டீசல் வரி உயர்வு பயன்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க. ஆட்சியில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைந்து உள்ளது. சர்வதேச சந்தையோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவு.

மேலும், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் தற்கொலை விவகாரத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அரசியலாக்குகின்றன. மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட கம்யூனிஸ்டு கட்சி தற்போது கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு புகுந்து பிரசாரம் செய்கிறது.

தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று ரோஹித் கடிதம் எழுதி உள்ள நிலையிலும் ராகுல்காந்தி தவறான பிரசாரம் செய்கிறார். 2008–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை இதே பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்கள் இறந்துள்ளனர். அப்போது அங்குச் செல்லாத ராகுல்காந்தி இப்போது மட்டும் சென்று உள்ளார். இது தரம் குறைந்த அரசியலை காட்டுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி., ரியல் எஸ்டேட் மசோதாக்கள் நிறைவேற்றப்படும். மோடி தலைமையிலான பா.ஜனதா பொறுப்பேற்ற பின்னர் ரூ.50 ஆயிரம் கோடி வரை நெடுஞ்சாலை, விவசாயம், மின்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசு புதிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!