வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (04/02/2016)

கடைசி தொடர்பு:13:04 (04/02/2016)

அறிவியலிலும் அரசியல்... திமுகவை விளாசும் விவசாயிகள்!

விவசாயிகளே... உங்கள் வயலில் மகசூல்கூட வேண்டுமா... ஏக்கருக்கு 3 மூட்டை டி.ஏ.பி போடுங்கள்! 2 மூட்டை பொட்டாஷ் போடுங்கள்! ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் தெளியுங்கள்! பஞ்சகவ்யாவை 100 லிட்டர் பாய்ச்சுங்கள்! இப்படி, விவசாயிகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தால், 'விவசாயிகளே.. டி.ஏ.பி, பொட்டாஷ், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று எதையுமே போடத் தேவையில்லை. உங்கள் வயலில் நடவு நடும்போது தளபதி ஸ்டாலினை அழைத்துச் சென்று அவர் கையால் நடச் சொல்லுங்கள்... அல்லது அவர் தொட்டுக் கொடுக்கும் நாற்றுகளை நடவு செய்யுங்கள்... ஏக்கருக்கு 40 மூட்டை நிச்சயம் விளைந்து கொழிக்கும்' என்று தமிழக வேளாண் பல்கலைக்கழகமே அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

ஆம், நமக்கு நாமே பயணத்தின்போது தஞ்சாவூர் அருகே அரசூரில் உள்ள ஒரு வயலில் இறங்கி நெல் நாற்றினை நடவு செய்தார் ஸ்டாலின். தற்போது அந்த வயலில் அறுவடை நடைபெற்ற நிலையில், 'தளபதி ஸ்டாலின் கைராசியால் வழக்கத்தைவிட அதிக மகசூல் கிடைத்திருக்கிறது' என்று பிரசாரம் செய்து வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள்.

அதேசமயம், 'ஸ்டாலின் நடவு செய்த வயல் என்பதால், அதை மிகவும் கவனமாக பராமரித்தார் பாபு. அதனால்தான் இந்த விளைச்சல்' என்று எதிர்வாதம் செய்துகொண்டுள்ளனர் அ.தி.மு.க-வினர்.

எது எப்படியிருந்தாலும், படாதபாடுபட்டு, பண்ணாத தந்திரங்களையெல்லாம் செய்து பலரும் விளைச்சலைப் பெருக்கிக்கொண்டிருக்கும் நிலையில், 'ஸ்டாலினின் கைராசி' நம்மை வியக்க வைக்கவே, இதிலிருக்கும் உண்மையை உணர்ந்துகொண்டால், எல்லா விவசாயிகளின் வயிலிலும் ஸ்டாலின் புண்ணியத்தில் பல மூட்டைகள் விளையும்... நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உணவுப் பஞ்சமும் புஸ்வாணமாகிவிடும் என்கிற நப்பாசையுடன் அந்த அதிசய வயலை நோக்கிப் பறந்தோம்.

அரசூரில் போய் இறங்கி விசாரித்தபோது, "நாட்டில் எவ்வளவோ முக்கிய பிரச்னைகள் இருக்கும்போது திமுக-வினர் தேவை இல்லாமல் இதை ஊதி பெரிதாக்குகிறார்கள்" என்ற நக்கலாக சிரித்தபடியே அந்த வயலை நமக்குக் கைகாட்டினர்.

அதன் உரிமையாளரான பாபுவை சந்தித்தோம். ‘‘எங்கள் ஊரில் மற்ற விவசாயிகளுக்கு எல்லாம் இந்த ஆண்டு ஏக்கருக்கு அதிகபட்சம் 33 மூட்டைதான் மகசூல் கிடைச்சிருக்கு. ஆனா, ஸ்டாலின் நடவு செஞ்ச இந்த ஒரு ஏக்கர் வயல்ல மட்டும் 40 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கு. ஆனா, மிகைப்படுத்தி சொல்றதாவும்... நிறைய உரம்போட்டு வளர்த்ததாவும் பலரும் கிண்டலடிக்கிறாங்க. இதை மிகைப்படுத்தி சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வழக்கம் போலதான் இந்த முறையும் உரம் கொடுத்து பராமரிச்சோம். அதிகமா உரம் கொடுத்தா, பயிர் கருகிடும். அதுவும் நாங்க பயிர் பண்ணது ஆந்திரா பொன்னி. ரசாயன உரங்கள் அதிகமா போட்டா, இந்தப் பயிர் தாக்குப் புடிக்காது’’ என்று சொன்னார்.

ஊரில் சில விவசாயிகளிடம் இதைப் பற்றி விசாரித்தோம். ‘‘நாங்க எல்லாம் 30 நாள் வயசுடைய நாற்றுகளைதான் நடவு செய்வோம். பாபுவோட வயல்ல நடவு செஞ்ச நாற்றுகள் 24 நாள் வயசுடையது. அதுமட்டுமில்லாம, எங்களைவிட இவர் 10 நாட்களுக்கு முன்னயே நடவு செஞ்சுட்டார். அதனால் சூல் கட்டும் பருவத்துல லேசான மழை பாதிப்புதான் ஏற்பட்டுச்சு. அதனால்தான் இவரோட வயல்ல மட்டும் ஏக்கருக்கு 40 மூட்டை மகசூல் கிடைச்சுது.

இவரே போன வருஷம் ஏக்கருக்கு 45 மூட்டை மகசூல் எடுத்தவர்தான். இந்த வருஷம் 40 மூட்டை மகசூல்ங்கிறதே குறைவானதுதான். கொஞ்சம் கூட மழை பாதிப்பு இல்லாம இருந்திருந்தா இவருக்கு மட்டுமில்ல... எங்களுக்கும்கூட இந்த வருஷம் 45 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கும். இதுல அதிசயம் ஒண்ணுமில்ல. ஆனா, விவசாயத்தைக் கூட அரசியலாக்கி பூதாகரப்படுத்துறாங்க’’ என்றார்கள்.

இதுகுறித்து பேசிய திருவையாறு விவசாயிகள் சங்க தலைவர் சுகுமாறன், ‘‘ஒருவேளை இது உண்மையாக இருந்தால், அவரை எல்லா விவசாயிகளின் நிலங்களுக்கும் அழைத்துச் சென்று நாற்று நடவு செய்யலாமே. எங்கள் பகுதியில் உள்ள பத்து விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து ஸ்டாலினுக்கு விமான டிக்கெட் எடுத்துதர தயாராக இருக்கிறோம். அவரை வரச்சொல்லுங்கள். 

முற்போக்கு, முடநம்பிக்கை ஒழிப்பு என்றெல்லாம் பேசி வளர்ந்த திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்தவர்கள், அறிவியல்பூர்வமான இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் கைராசி என்றெல்லாம் கூறி அரசியல் செய்வது அபத்தமானது, கேலிக்கூத்தானது. இதை ஸ்டாலினே அழைத்து கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

இதையெல்லாம் அனுமதித்தால், 'விவசாய பல்கலைக்கழகமே... தமிழகத்தின் சுபாஷ் பாலேக்கரே... இளைய நம்மாழ்வாரே' என்று கூட தேர்தல் சமயத்தில் தி.மு.க-வினர் பிரசாரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லும் நிலைக்கு தி.மு.க தள்ளப்பட்டுவிட்டது வேதனையே.

40 மூட்டை என்ன... 60 மூட்டைக்கும் மேல் மகசூல் எடுத்த சாதனை விவசாயிகளும் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் பல தொழில்நுட்ப காரணங்கள் இருக்கின்றன. இந்த வயலில் 40 மூட்டை விளைந்ததற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைபோல அறிவியல் விஷயத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி, விவசாயிகளின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது’’ என கொந்தளித்தார்.

ஞாயமாரே... இது நியாயமா?


- கு. ராமகிருஷ்ணன்
படங்கள்:
ம.அரவிந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்