அப்போ இவங்களும் பிஜேபி கூட்டணியில் இல்லையா?

கோவை: பி.ஜே.பி. கூட்டணியில் உறுதியாக உள்ள ஒரே கட்சி என சொல்லப்பட்ட கொ.ம.தே.க.வும் பி.ஜே.பி.யை கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று என அறிவிக்கப்பட்ட அணி பி.ஜே.பி அணி. தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., கொ.ம.தே.க என பல கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தது பி.ஜே.பி. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். ம.தி.மு.க. மக்கள் நலக்கூட்டணியில் ஐக்கியமாகி விட, தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் பி.ஜே.பி கூட்டணியில் நீடிப்பதாக சொல்லவில்லை. பி.ஜே.பி. கூட்டணியில் இருக்கும் ஒரே கட்சியாக காட்டிக்கொண்டது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மட்டும் தான்.

இந்நிலையில், அந்த கட்சியும் பி.ஜே.பி.யை கடுமையாக விமர்சித்துள்ளது. கோவை, வடவள்ளியில் கொ.ம.தே.க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், "அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்காக போராடுபவர்களை பார்த்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டியது தானே. அதை விட்டு இப்போது வந்து இளங்கோவன் ஆதரவு கொடுக்கிறார்.

பி.ஜே.பி. தானே இப்போது மத்தியில் ஆட்சியில் உள்ளது. கடந்த ஓராண்டில் இவர்கள் என்ன செய்து கிழித்தார்கள். இப்போது போராட்டம் நடத்துபவர்கள் சில மாதங்களுக்கு முன்பு நிர்மலா சீத்தாரமனை நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை வழங்கினர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கெயில் பைப் லைன் சாலையோரம் செல்கிறது. இங்கு மட்டும் விவசாய நிலத்தில் செல்வதா? மத்தியில் ஆளும் பி.ஜே.பி. என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பி.ஜே.பி தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பிரதமர் தானே மோடி. அவரை நேரில் பார்த்து நிலைமையை சொல்லி பிரச்னையை தீர்க்க வேண்டியது தானே. அதை செய்யாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்" என பி.ஜே.பி.யை கடுமையாக விளாசினார் ஈஸ்வரன்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகளை கடுமையாக விமர்சித்த ஈஸ்வரன், இறுதியில் 'சட்டமன்ற தேர்தலில் நாங்கள் இருக்கும் அணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்' என்றார். அப்போ எந்த கூட்டணியில இவர் இருப்பார்னு தெரியலையே என குழப்பத்திலே கலைந்து சென்றனர் கட்சியினர்.

ச.ஜெ.ரவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!