வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (13/02/2016)

கடைசி தொடர்பு:17:34 (13/02/2016)

நள்ளிரவில் நடந்த பணமாற்றம்... வாடிக்கையாளர்களுக்கு 'பகீர்' தந்த ஸ்டேட் பேங்க்!

புதுக்கோட்டையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையை அதிகாலை ஆறு மணிக்கு பொதுமக்கள்  முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு உண்டானது.

புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. இங்கு அதிகமாக அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ,மத்திய மாநில அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் என்று 1000 க்கும் மேற்பட்டோர் தங்களது பணிக்கால சேமிப்பு பணத்தை,  சேவிங்க்ஸ் அக்கவுண்டில் போட்டு வைத்து இருக்கிறார்கள். பணம் தேவைப்படும் பொழுது மட்டும் அந்த பணத்தை எடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில்  வாடிக்கையாளர்களின் செல்போனிற்கு,  உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்டுள்ளது என்று தகவல் வந்ததும் பல்வேறு நபர்கள் அலறி அடித்துக்கொண்டு,  வங்கி நிர்வாக இலவச சேவையை தொடர்பு கொண்டு உள்ளனர். அங்கு சரியான பதில் இல்லை என்பதால் இன்று அதிகாலை 5 மணிக்கே வங்கி வாசலில் கூடி விட்டனர்.

பாதிக்கப்பட்ட மீனாட்சி சுந்தரம் என்பவர், "ஆசிரியராக பணியாற்றி ஓய்வில் இருக்கிறேன். எனது வங்கி கணக்கில் 5,25000 ரூபாய் இருந்தது. அதில் இருந்து ஐந்து லட்சத்தை பிக்சட் டெபாசிட்டிற்கு மாற்றியதாக எஸ்.எம்.எஸ். வந்தது. உடனே SBI  வங்கி இலவச டோல் ஃபிரீ நம்பரில்,  வங்கி  நிர்வாகத்தை தொடர்பு கொண்ட பொழுது சரியான பதில் இல்லை. எனது நண்பர்களுக்கு போன் செய்தால் இதே பிரச்னைதான் அவர்களுக்கும் இருந்ததாக கூறினார்கள்.

பணம் போச்சு என்று இரவு முழுதும் தூக்கம் இல்லை. எனக்கு தெரியாமல், என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி வங்கி நிர்வாகம் எனது கணக்கை வேறு ஒரு திட்டத்தில் மாற்ற முடியும்? பாதுகாப்பு இல்லை என்ற மன நிலையில் இன்னும் கை கால் ஓடவில்லை. தனியார் வங்கிகள் அதிக கொள்ளை அடிப்பதால்தான் அரசு வங்கிக்கு வருகிறோம். ஆனால் இங்கு பாதுகாப்பு என்பது இல்லை" என்றார்.

வங்கி இன்று விடுமுறை என்பதால் வங்கி திறக்காமல் இருந்தது. நேரம் ஆக ஆக விஷயம் காட்டுத்தீ போல பரவ, ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வங்கியின் முன்பு கூடி விட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து,  வங்கி மேலாளர் நரசிம்மனை வரவழைத்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சொன்னார்கள்.

நரசிம்மன் " சேவிங்ஸ் கணக்கில் இருந்து மல்ட்டி ஆப்சன் டெபாசிட்  திட்டத்தில் உங்களது பணத்தை வங்கி நிர்வாகம் மாற்றியுள்ளது. யாரும் பயங்கொள்ளவோ, பதட்டப்படவோ வேண்டாம். உங்களது கணக்கில் பணம் அப்படியே இருக்கிறது. நீங்கள் முன்பு எப்படி வரவு செலவு வைத்தீர்களோ அப்படியே வைத்துக்கொள்ளலாம். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. திங்கள் கிழமை நேரில் வந்து உங்களது சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் "என்றார்.

இருந்தாலும் மக்கள் பாதுகாப்பற்ற மனநிலையுடன் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். நடந்தது என்னவென்று ஸ்டேட் பேங்க் நிர்வாக உயர் அதிகாரிகள் சிலரிடம்  கேட்டோம்.

" MOD(multi option deposits) என்கிற திட்டம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் பணத்தைப்போடும் வாடிக்கையாளர்களுக்கு  ஏழரை சதவிகிதம் வட்டி கொடுக்கப்படும். இப்பொழுது உள்ள சேவிங்ஸ் கணக்கு போல்தான் இதுவும். பெரிய மாற்றங்கள் இல்லை. நடைமுறையில் உள்ள கணக்கில் நான்கு சதவிகிதம் வட்டி மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களை சேர்க்க,  முறைப்படி அவர்களின் அனுமதி வாங்கி எழுத்துப்பூர்வமான விருப்ப கடிதம் கொடுத்த பிறகே,  அவர்கள் கணக்கில் இருந்து பெரும் பகுதியை எடுத்து எம்.ஓ.டியில் போடப்படும். இன்னொரு முறைப்படி புதிதாக வங்கி கணக்கு ஆரம்பிக்கும் பொழுது வங்கியின் விண்ணப்பத்தில் அதற்கான ஆப்சன் இருக்கும். அதை டிக் செய்து கொடுத்தால்போதும். முறைப்படி வாடிக்கையாளிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். வாங்கி இருந்தால் இந்த குழப்பமான சர்ச்சை வந்திருக்காது. தற்பொழுது புதுக்கோட்டையில் நடந்தது தவறுதான் " என்றார்கள்.

- சண்.சரவணக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்