பனிச்சரிவில் சிக்கி இறந்த வேலூர் ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

வேலூர்: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி மரணம் அடைந்த வேலூர் ராணுவ வீரர் ஹவில்தார் ஏழுமலை உடல் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

தாய் நாட்டிற்காக  ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டு 20 வருடங்கள் பணியாற்றியவர்  ஹவில்தார் ஏழுமலை. இவர் திருவண்ணாமலை மாவட்டம் மேலானூர் கிராமத்தில்  பிறந்தவர். இவரது தந்தை முத்து,  ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். சிறு வயது முதலே தன் தந்தையை பார்த்து வளர்ந்த ஏழுமலைக்கு,  தானும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் இருந்து வந்தது. அந்த ஆர்வத்தினால் 10-ம் வகுப்பு தேர்வை முடித்த உடன்,  ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தோடு 1996- ம் ஆண்டு,  சென்னையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டார்.  முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று,  ஊட்டியில் உள்ள வெல்லிங்டன்னில் பயிற்சி பெற்று,  மெட்ராஸ் ரெஜிமெண்ட் மூலம் ராணுவத்தில் சிப்பாயாக  பணியாற்ற சென்றார்.

 ராணுவத்தில் சிப்பாயாக மட்டும் இருந்து விடாமல் திறந்த வெளியில் கல்வி பயின்றும், பல தேர்வுகளை எழுதியும் பல கட்ட பயிற்சிகளுக்கு பிறகு தற்போது ஹவில்தார் பதவியில் இருந்து வந்தார்.

1999-ல் நடைபெற்ற கார்கில் போரிலும் பணியாற்றியுள்ளார். மேலும் பூஞ்ச் மாவட்டத்தில் பல்வேறு முறை தீவிரவாதிகளுடனும், பயங்கரவாதிகளுடனும் சண்டையிட்டுள்ளார். ஒரு சமயம் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் சண்டையிடும்போது கன நொடியில் உயிர் தப்பினார்

பின்னர் மரணத்திற்கு முன்புவரை இமயமலை அடிவாரத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஊருக்கு வரும் போதெல்லாம்,  எப்படியாவது தனது வாழ் நாளில் உலகில் உயரமான பகுதியான சியாச்சின் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று தனது நண்பர்களிடம் தொடர்ந்து கூறிவந்திருக்கிறார்.

அதற்கேற்றார் போல் அவரது உயரதிகாரிகளிடத்திலும் தன்னை அப்பகுதிக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார் போதிய பயிற்சி இல்லாத காரணத்தால் இவரை அனுப்ப அதிகாரிகள் மறுத்துள்ளனர். பின்னர் விடாப்பிடியாக பல கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு,  தற்போது சியாச்சின் மலைப் பகுதிக்கு செல்லும்போது சுமார் 22,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக வீர மரணம் அடைந்துள்ளார்.

சியாச்சின் மலைப் பகுதி மனிதன் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக இருந்தபோதிலும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க,  நம் இந்திய அரசு அங்கு கண்காணிப்பு முகாம்களை அமைத்துள்ளது.

ஒரு சில சமயங்களில் இரவு நேரத்தில் முற்றிலுமாக ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். மனித  உடல் வெப்பத்திற்கே பனிக்கட்டிகள்  உருகும் தன்மை கொண்டவை ஆகும். அப்படிப்பட்ட இடத்தில்தான்,  நாம் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பதற்காக தங்கள் உறக்கத்தை இழந்து,  உடலை வருத்தி,  நாம் நாட்டை காத்து வருகின்றனர் ராணுவ வீரர்கள். குறிப்பாக சியாச்சினுக்கு பாதுகாப்பிற்க்கு சென்ற 10 பேரும் பனிச்சரிவில் மாட்டிக்கொண்டோம் என்று ராணுவத்தினருக்கு தகவல் கொடுத்ததே ஏழுமலைதான் என்கிறார்கள் ராணுவத்தினர். 

எங்கோ பிறந்து வளர்ந்து, தனது குடும்ப உறவுகள் சொந்தபந்தங்களை விட்டு பிரிந்து இரவு, பகல் பாராமல் உழைத்து,  எட்ட முடியாத உயரத்திற்கு சென்று வீரமரணம் அடைந்துள்ளார் ஹவில்தார் ஏழுமலை.

ஹவில்தார் ஏழுமலைக்கு வீர வணக்கம்.


- ம.சுமன் (மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!