மகாமகம் விழாவில் இன்று தீர்த்தவாரி: புனித நீராட லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்! | Mahamakam theerthavari today, millions of devotees take bathe

வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (22/02/2016)

கடைசி தொடர்பு:10:16 (22/02/2016)

மகாமகம் விழாவில் இன்று தீர்த்தவாரி: புனித நீராட லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

கும்பகோணம்: மகாமகம் விழாவில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவதால், மகாமகம் குளத்தில் புனித நீராட லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது. குரு சிம்மராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

இந்த விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கோவில்களில் சிறப்பு வழிபாடும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. கொடியேற்றிய நாள் முதலே மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். நேற்று வரை சுமார் 30 லட்சம் பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடியிருக்கிறார்கள்.

மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த நாளில் மகாமக குளத்தில் புனித நீராடுவது, 12 கும்பமேளாவில் புனித நீராடியதற்கும், 108 ஆண்டுகள் காசியில் வாழ்ந்து கங்கையில் தினமும் நீராடியதற்கும் சமம் என்று கருதப்படுகிறது. தீர்த்தவாரியில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருவதால், உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தீர்த்தவாரியின் துவக்கமாக கும்பகோணத்தில் உள்ள 12 சைவ கோவில்களிலும், ஐந்து வைணவ கோவில்களிலும் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, 12 சைவ கோவில்களில் இருந்து உற்சவர்கள் வீதி உலாவாக புறப்பட்டு, மகாமகக் குளத்தில் பகல்12:00 மணிக்கு மேல் தீர்த்தவாரி காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வடமேற்கு கரையில் ஆதி கும்பேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதே பகுதியில் காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர் ஆகியோருக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. கிழக்கு கரையில் பாணபுரீஸ்வரர் மற்றும் அபிமுகேஸ்வரருக்கும், மேற்கு கரையில் காளஹஸ்தீஸ்வரர், கோடீஸ்வரருக்கும், தெற்கு கரையில் அமிர்தகலசநாதர், கவுதமேஸ்வரருக்கும் தீர்த்தவாரி நடக்கிறது.

அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளின் மகாமக தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதேநேரம் காவிரி ஆற்றில் உள்ள சக்கர படித்துறையில் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகியோருக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஆதிகும்பேஸ்வரர் மகாமக குளத்தில் இறங்கியதும் அவரது தீர்த்தவாரி நிகழ்ச்சி பச்சைக்கொடி அசைத்து பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து மற்ற சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும்.

சுவாமிகள் தீர்த்தமாடி முடிந்ததும் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள். தீர்த்தவாரி நேரத்தில் மகாமக குளத்தில் பக்தர்களுடன் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியோர் புனித நீராடுகிறார்கள். மேலும் முக்கிய பிரமுகர்களும் இன்றைய தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். மகாமக குளத்தில் ஆதி கும்பேஸ்வரருக்கு தீர்த்தவாரி முடிந்தவுடன் வடக்கு கரையில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

இன்று இரவு வெள்ளி கைலாச வாகனத்தில் பஞ்சமூர்த்திகளும் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். முக்கிய வீதிகள் வழியாக பஞ்ச மூர்த்திகள் கோவிலுக்கு வந்தவுடன் கொடி இறக்கப்படும். அதைத்தொடர்ந்து சாமிகளுக்கு அர்த்தசாம பூஜை செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது. மகாமக தீர்த்தவாரியை முன்னிட்டு இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வசதிக்காக கும்பகோணம் நகரை சுற்றி 7 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,800 சிறப்பு பஸ்களும், 68 சிறப்பு ரயில்களும் பல்வேறு ஊர்களில் இருந்து கும்பகோணத்திற்கு இயக்கப்படுகின்றன. மகாமகம் குளத்தில் இன்று புனித நீராட நாடெங்கிலுமிருந்து சுமார் 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், கும்பகோணம் முழுவதும் 20,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்