வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (25/02/2016)

கடைசி தொடர்பு:17:33 (25/02/2016)

முடிவுக்கு வந்த மனிதநேய மக்கள் கட்சி விவகாரம்; தமீமுன் அன்சாரி மனு தள்ளுபடி!

சென்னை:  மனித நேய மக்கள் கட்சி யாருக்கு சொந்தம் என நடைபெற்ற வழக்கில் தமீமுன் அன்சாரி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனித நேய மக்கள் கட்சி,  அக்கட்சித் தலைவர் ரிபாயி தலைமையில், கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஜவாஹிருல்லா, ஆம்பூர் தொகுதியில் அஸ்லாம் பாஷா ஆகிய 2 பேர்  எம்.எல்.ஏ.க்களாக  வெற்றி பெற்றனர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில்,  திமுக கூட்டணியில் சேர்ந்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதனிடையே மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் மதிமுக,  மனித நேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் , இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய 5 கட்சிகளும் ஒரு அணியை அமைத்து, மக்கள் நல பிரச்னைகளில் போராட்டங்கள் நடத்தின.

பின்னர் வைகோ, மக்கள் நல கூட்டியக்கம் அரசியல் கூட்டணி என்றும், அதிமுக,  திமுக கட்சிகளுடன் கூட்டு வைக்காது என்றும் அறிவித்தார். அவரின் இந்த முடிவை மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரான ஜவாஹிருல்லா ஏற்கவில்லை. அதிமுக அணியில் சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்த ஜவாஹிருல்லா, 5 கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஜவாஹிருல்லாவின் முடிவுக்கு மமக கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி உள்பட சில நிர்வாகிகள், 5 கட்சி கூட்டணி கூட்டங்களில் கலந்து கொண்டதோடு ,  மனித நேய மக்கள் கட்சி 5 கட்சி கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்தனர்.

இதனால் கட்சி உடைந்தது. இதையடுத்து இரு அணியினரும் போட்டி பொதுக்குழுவை கூட்டினர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோரின்  தலையீட்டில் சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தாம்பரத்தில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தமீமுன் அன்சாரியும், இணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆரூண் ரஷீத்தும்  நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமீமுன் அன்சாரி,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி தங்களுக்கே சொந்தம் என்று வழக்கு தொடுத்தார். பொதுக்குழு,  செயற்குழு உறுப்பினர்கள் பலர் தங்கள் அணியிலேயே இருப்பதாக அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில்,  தமீமுன் அன்சாரியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் ஜிவாஹிருல்லா தலைமையில் இயங்கும் மமக சட்டப்படியான கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்