Published:Updated:

வீட்டின் குளிர்சாதனப் பெட்டியின் அடியில் புகுந்த 6 அடி நீளப் பாம்பு - சென்னை அருகே இரவில் பரபரப்பு

திருநின்றவூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
திருநின்றவூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருநின்றவூரில் 6 அடி நீளம்கொண்ட நல்ல பாம்பு புகுந்தது. அதைத் தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருநின்றவூர், செல்வராஜ் நகர் 1-வது தெருவில் குடியிருந்து வருபவர் மணிகண்டன். ஊரடங்கு காரணமாக மணிகண்டன், மற்றும் அவரின் குடும்பத்தினர் வீட்டிலேயே இருந்துவருகின்றனர். நேற்றிரவு 9 மணியளவில் மணிகண்டன், தன்னுடைய குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு உள்ளே வந்தது. அதைப்பார்த்த மணிகண்டனின் குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தனர்.

`ஒரே கிராமம்... ஆண்டுக்கு 30 லட்சம் பாம்புகள்!’ - தொடரும் தடையால் கலங்கும் சீன `பாம்பு கிராமம்’
பாம்பைப் பிடித்த தீயணைப்புத் துறையினர்
பாம்பைப் பிடித்த தீயணைப்புத் துறையினர்

பாம்பு, பாம்பு என மணிகண்டனின் குடும்பத்தினர் சத்தம் போட்டனர். அதைக்கேட்டு அந்தத் தெருவில் உள்ளவர்கள் வந்தனர். வீட்டுக்குள் பாம்பு இருப்பதால் யாரும் உள்ளே செல்லவில்லை. மணிகண்டனின் வீட்டின்முன் கூட்டம் கூடியது. இதையடுத்து, ஆவடி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டுக்குள் நுழைந்தனர்.

வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகத் தேடினர். சமையலறை, படுக்கையறை எனத் தீயணைப்புத் துறையினர் தேடியபோது, ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஃபிரிட்ஜ்ஜின் அடிப்பகுதியில் பாம்பு சுருண்டு இருப்பதைக் கண்டறிந்தனர். உடனே தீயணைப்புத் துறையினர் பாம்பைப் பிடித்தனர். பின்னர் அதை வெளியில்கொண்டு சென்றனர். அதன்பிறகே மணிகண்டனின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

பாம்பு
பாம்பு

பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தபோது அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். பிடிப்பட்ட பாம்பை மூடிபோட்ட வாளிக்குள் அடைத்த தீயணைப்பு வீரர்கள் அதைச் சர்வசாதாரணமாக தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ``வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஹாலில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் அடியில் இருந்தது. 6 அடி நீளம் கொண்ட அந்தப் பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளோம். வனத்துறையினர் அந்தப் பாம்பை காட்டுப்பகுதியில் விட்டுவிடுவார்கள். 15 நிமிடத்தில் பாம்பை பிடித்துவிட்டோம்" என்றனர்.

மணிகண்டன் வீட்டுக்குள் நுழைந்த பாம்பு, பிரிட்ஜுக்குள் பதுங்கிய சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு