வால்பாறையில் பேய் வதந்தி... பீதியில் மக்கள்!

வால்பாறையில் பேய்கள் நடமாடுவதாக கிளம்பியுள்ள வதந்தியால் அந்தப் பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். வால்பாறையில் உள்ளது கருமலை எஸ்டேட். அங்கு அதிகளவில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரகமும், வனத்துறையும் தீவிர நடவடிக்கையில் இறங்கின. அதன் சுற்றுப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தப்பட்டன. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதால் இனி வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் தெரிந்துவிடும், அதற்கேற்றது போல் நாங்கள் எங்கள் வேலையை ஆரம்பித்து விடுகிறோம் என்று பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியாக இருந்தனர்.

இந்நிலையில் நேற்று கண்காணிப்புக் காமிராக் கருவியை கருமலை எஸ்டேட் பகுதி மக்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது காமிரா பதிவில் இருந்த காட்சிகளை பார்த்ததும் அவர்களுக்கு வனவிலங்குகள் மீதான பயம் போய் வேறு மாதிரியான பயம் தொற்றிக் கொண்டு விட்டது. எது மாதிரியும் இல்லாத நீண்ட விரல்களையும், நகங்களையும் கொண்ட  ரோமம் மிகுந்த கால்கள் அந்த காமிராவில் பதிவாகியிருந்தது. அத்தோடு  வெளிர்சிவப்பு நிறத்தில் கண்,  மூக்கு, வாய் கொண்ட பாம்பின் அமைப்புடன் கூடிய ஒரு உருவமும் அதில் பதிவாகியுள்ளது.

கண்காணிப்பு காமிராவில் தோன்றும்படி யாரேனும்  விஷமிகள்  செய்த வேலையா இது என்ற சந்தேகம் அதிகாரிகள் தரப்பில் முழுமையாக இருக்கிறது.

ஆனால் மக்களில் ஒரு தரப்பினர் , "இது கண்டிப்பாக 'பேய்' தான்... இவ்வளவு நாட்களாக நம்மை மிரட்டி வந்ததும் இவைகள்தான்" என்றே கதற  ஆரம்பித்துள்ளனர்.

கருமலை எஸ்டேட்டில் வசிக்கும் மக்களின் சந்தேகத்தை தீர்த்து,  அவர்களை நிம்மதியாக இருக்க வைக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

-ந.பா.சேதுராமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!