'அ.தி.மு.கவின் பலவீனங்கள் பா.ஜ.கவுக்கு சாதகமாக முடியும்...!' -வானதி சீனிவாசனின் பலே 'தேர்தல் கணக்கு'!

சட்டமன்றத் தேர்தலில் முதல்கட்டமாக 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். ' தனித்துவிடப்பட்டாலும், தனித்துவமான கூட்டணியாக இருப்போம்' என மீடியா முன்பு அசரடித்தாலும், களநிலவரத்தை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் வேட்பாளர்கள் சிலர்.

' ஒன்றரை ஆண்டுகளில் கூட்டணிக் கட்சிகளை சரியாக வழிநடத்திச் சென்றிருந்தால், பா.ஜ.கவுக்கு சில எம்.எல்.ஏக்களாவது கிடைத்திருப்பார்கள். இப்போது தனித்துப் போட்டி என்ற பெயரில் வேட்பாளர்களை பலி கொடுக்கிறார் தமிழிசை'  என்ற குரல்களும் எழுகின்றன. பா.ஜ.க அறிவித்துள்ள வேட்பாளர்களில், தி.நகர் தொகுதியில் ஹெச்.ராஜாவும், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.

பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினேன்.

நீங்கள் பிறந்து வளர்ந்த தொண்டாமுத்தூர் தொகுதியை தேர்வு செய்யாமல், தெற்கு தொகுதியை தேர்வு செய்தது சரியா?

(பலமாக சிரிக்கிறார்) எங்கள் கட்சித் தலைமை, யார் எங்கு போட்டியிட வேண்டும் என வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது. கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க. ஓட்டு வங்கி கணிசமாக இருக்கிறது. என்னுடைய விருப்பமாகவும் அந்தத் தொகுதி இருந்தது. அதனால் தேர்வு செய்தேன்.

பா.ஜ.கவுக்கு செல்வாக்கு இருக்கிறது என எப்படிச் சொல்கிறீர்கள்?


நாடாளுமன்றத் தேர்தலில் படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் ஓட்டு எங்கள் கட்சி வேட்பாளருக்கு அதிக அளவில் கிடைத்தது. இதனால், எம்.பி தேர்தலில் பிரதானமான இடத்திற்கு நாங்கள் முன்னேறினோம். எனவே, இந்தத் தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என கட்சி உறுதியாக நம்புகிறது. எங்கள் கட்சிக்கான ஆதரவுத்தளமும் இங்கு அதிகமாக இருக்கிறது. தவிர, கோவையின் உள்கட்டமைப்பு வசதி மிக மோசமாக இருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப மாநகராட்சி எந்த வசதியும் செய்து தரவில்லை. ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப் போவதில் கோவைக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. அதைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் எங்களுக்கு இருக்கிறது. ஆகவேதான் சொல்கிறேன். பா.ஜ.க வெற்றி பெறக் கூடிய தொகுதியாக இது இருக்கும்.

இந்தத் தேர்தலில் ஆறுமுனைப் போட்டி நடக்க இருக்கிறது. இவ்வளவு பேர் களத்தில் இருக்கும்போது வெற்றிபெறுவோம் என எப்படி நம்புகிறீர்கள்?

பலமுனைப் போட்டியில் வாக்குகள் சிதறும்போது, அது பா.ஜ.கவிற்குத்தான் சாதகமாக முடியும்.

மக்கள் நலக் கூட்டணியால் உங்களுக்கு பாதிப்பில்லையா?


அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர்வார்கள். மத்தியில் நாங்கள் ஆளுங்கட்சியாக இருப்பதே மிகப் பெரிய ப்ளஸ். மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை அவர்களைவிட எங்களால் முன்னெடுக்க முடியும். மக்கள் நலக் கூட்டணி ஒன்றுக்கொன்று பொருந்தாத கூட்டணி. அவர்களால் ஒன்று திரண்டு ஓர் அரசாங்கத்தைக் கொடுக்க முடியும் என மக்கள் நம்ப மாட்டார்கள்.

கோவை தெற்கு தொகுதியைப் பற்றிய உங்களைப் பார்வை என்ன?
 
கோவை டவுன்ஷிப் முழுவதும் இந்தத் தொகுதிக்குள் வருகிறது. மேம்பாலம் கட்டுகிறார்கள். பணிகள் விரைவாக நடக்காததால், மக்கள் அவதிப்படுகிறார்கள். இப்போதுள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏ எனக்கு கூடுதல் ப்ளஸ். ஏனென்றால், அவர் தொகுதிக்குள் எதையும் செய்யவில்லை. அவர் எந்தவிதத்திலும் மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை. மக்கள் கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் பலவீனங்கள் எனக்குப் பலமாக மாறும். தவிரவும், தேவேந்திர குல வேளாளர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதி இது. சமீபகாலத்தில் அந்த சமூகத்தினர் எங்களோடு இணக்கமாக இருக்கிறார்கள். தேசியத் தலைவரையும் பிரதமர் மோடியையும் தேவேந்திர குல மக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களின் வாக்குகள் முழுக்க எனக்குக் கிடைக்கும்".

தேர்தல் களத்தில் ஒரு சோதனை முயற்சியாகத்தான் நிற்கிறோம் என உணர்கிறீர்களா?

இதில் எந்தவிதத் தொய்வோ, தனித்துவிடப்பட்ட மனநிலையோ எனக்கில்லை. மத்தியில் நடக்கும் ஊழலற்ற அரசைப் போல, மாநிலத்திலும் ஊழல் இல்லாத நேர்மையான அரசை பா.ஜ.கவால் அமைக்க முடியும். அதை எங்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கோவை தெற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

வாக்காளர்களுக்கு அடிப்படையாக தேவைப்படுவது, எளிதில் அணுகுபவராக, நேர்மையானவராக, பிரச்னைகளைத் தீர்ப்பவராக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இவை மட்டும்தான். 1987-ம் ஆண்டில் இருந்து நான் மாணவர் அமைப்பில் இருக்கிறேன். என்னுடைய போராட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் அறிவார்கள். அவர்களின் பிரதிநிதியாக என்னைத் தேர்வு செய்வார்கள். 

-ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!