காபந்து ஆட்சியிலும் டாஸ்மாக் எதிர்ப்பாளர்கள் மீது வழக்கு: கொதிக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம்!

"மூடு டாஸ்மாக்கை" மாநாட்டில் மது ஒழிப்பு குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள் 6 பேர் மீது “காபந்து அரசாக” செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசு,  தேசத்துரோக வழக்கு போட்டிருப்பதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மதுவிலக்கு கோரி நடத்தப்பட்ட எண்ணற்ற போராட்டங்களைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு, இப்போராட்டங்கள் நடத்துவோரை அடக்கி ஒடுக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” மாநாட்டில் மதுஒழிப்பு குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள் ராஜீ, காளியப்பன், டேவிட்ராஜ், ஆனந்தியம்மாள், வாஞ்சிநாதன், தனசேகரன் ஆகிய 6 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டிருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியாகி “காபந்து அரசாக” செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் அதிமுக அரசானது இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து இவ்வரசானது கடந்த 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் காவல்துறையை சமூகப் போராளிகளுக்கு எதிராக எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

”எது தேசத்துரோகம்”? குடிகெடுக்கும் டாஸ்மாக் கடையை மூடுங்கள் என்று கேட்பது தேசத்துரோகமா? மாணவர்களைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடுங்கள் என்று கேட்பது தேசத்துரோகமா?

2011 தேர்தலில் அதிமுக கூட்டணி அரசு பெற்ற மொத்த வாக்குகள் 1.91 கோடி. கிட்டத்தட்ட 2 கோடி. இதில் சரிபாதியோ, அதற்கு மேலோ பெண்களின் வாக்காக இருந்திருக்கும். இப்படி 1 கோடி பெண்களின் வாக்கை வாங்கி ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, டாஸ்மாக் கடைகள் நடத்தி பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது. தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று நம்பி வாக்களித்த 1 கோடி பெண்களுக்கு டாஸ்மாக் மூலம் அதிமுக செய்வது பச்சைத் துரோகம். டாஸ்மாக் கடைகள் குடும்பங்களைச் சீரழிக்கிறது என்பது தெரிந்தும், விடாப்பிடியாக மதுக்கடைகள் நடத்தும் ஜெயலலிதா அரசை “மக்கள் துரோக அரசு” என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். ஓட்டுப்போட்ட கோடிக்கணக்கான மக்களுக்குத் துரோகம் செய்த அரசு இன்று சமூக ஆர்வலர்கள் மீது தேசத்துரோக வழக்குப்போடுவது வேடிக்கையாக இருக்கிறது.

பேச்சுரிமை, கருத்துரிமைக்கு மதிப்பளிக்காமல் 6 பேர் மீதும் வழக்குப்போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் அதிமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆர்வலர்கள் 6 பேர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்று விரைவில் நிரூபணமாகும். அவர்கள் விடுதலையாவார்கள். இவர்கள் பொய்வழக்கிலிருந்து விடுதலையாகும் சமயத்தில்  ”மக்கள் துரோக அரசு” நடத்துவோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!