எங்கள் ஆதரவு உங்களுக்கு இல்லை... வைகோவுக்கு ஆம் ஆத்மி கைவிரிப்பு!

சென்னை: விஜயகாந்த்-மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்ததை தொடர்ந்து, அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை தொடர்ந்து அந்த கூட்டணி தலைவர்கள், தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று முன்தினம் சென்னை தியாகராயநகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சென்று, அதன் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது, சட்டசபை தேர்தலில் விஜயகாந்த்–மக்கள் நலக்கூட்டணிக்கு, ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அந்த நேரத்தில், ஆம் ஆத்மி கட்சி அலுவலத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்கள், விஜயகாந்த் அணிக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த்-மக்கள் நலக் கூட்டணிக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சோம்நாத் பாரதி கையெழுத்திட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ''தமிழக சட்டசபை தேர்தல் நிலவரங்களை ஆம் ஆத்மி கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஊழல்தான் மிகப்பெரியதாக சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. அதனால், தமிழகத்தில் அனைத்து அமைப்புகளையும் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. எனவே இந்த நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது" என கூறப்பட்டு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!