Published:Updated:

ஓய்வு நாள்களில் வெளிமாவட்ட பயணம்! -62 போலீஸாருக்கு மெமோ வழங்க உத்தரவிட்ட தூத்துக்குடி எஸ்.பி

ஊரடங்கு பாதுகாப்பில் போலீஸார்
ஊரடங்கு பாதுகாப்பில் போலீஸார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், ஓய்வு நாள்களில் உள்ளூரில் இருக்காமல், வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்பிய 62 போலீஸாருக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டல பட்டியலிலும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பச்சை நிற பட்டியலிலுள்ள நிலையில், இன்று அங்கு ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு பாதுகாப்பு பணி
ஊரடங்கு பாதுகாப்பு பணி

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு சுழற்சி முறையில் பணியும், அதன்பின் ஒய்வும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் 1,300 போலீஸாரும், 4 மாவட்டங்களைச் சேர்ந்த 200 பட்டாலியன் போலீஸார் என மொத்தம் 1,500 போலீஸார் ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 7 நாள்கள் பணி, 7 நாள்கள் ஓய்வு என சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த ஓய்வு நாள்களில் வீடு, காவலர் குடியிருப்பு, தங்கும் அறைகள் என தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த ஓய்வின் நோக்கம். அந்த நாள்களில் மாவட்டத்துக்குள்ளேயே இருக்க வேண்டும். ஓய்வில் இருக்கும் போலீஸாரை கண்காணிக்க ஒவ்வொரு சப் டிவிசனுக்கும் ஒரு ஆய்வாளர் நியமிக்கப்பட்டு, ஓய்வில் இருப்பவர்களைத் தினமும் பார்வையிட்டு வருகைப் பதிவேட்டில், பதிவு செய்து அறிக்கையை எஸ்.பி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊரடங்கு பணியில் போலீஸார்
ஊரடங்கு பணியில் போலீஸார்

இந்த நடைமுறை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், இந்த நடைமுறையை சில போலீஸார் பின்பற்றாமல், கண்காணிக்கும் ஆய்வாளர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டும், ஆய்வாளர்களிடம் காரணம் சொல்லி சமாளித்தும் வெளி மாவட்டங்களிலுள்ள தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதும், ஓய்வு நாள்கள் முடிந்து மீண்டும் பணி ஒதுக்கப்பட்ட நாளில் பணியில் சேர்வதும் தொடர்கதையாகி வந்தது. இந்த நிலையில், ஒரு மாத கணக்கெடுப்பில் சிக்கிய எஸ்.ஐ, எஸ்.எஸ்.ஐ, ஏட்டு உள்ளிட்ட 62 போலீஸாருக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், ``மூன்று பிரிவுகளில் இரண்டு பிரிவு போலீஸார் பணியில் இருப்பார்கள். ஒரு பிரிவு போலீஸார் ஓய்வில் இருப்பார்கள். கடந்த 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஒரு பிரிவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்கள் 29-ம் தேதி மீண்டும் காலை 6 மணிக்கு பணிக்கு வர வேண்டும். இதில், ஒருவர் தனது சொந்த ஊரான திருச்சிக்கு பைக்கில் பறந்தார். அவர் தங்குமிடத்தில் ஆய்வு செய்து வருகைப்பதிவு அளிக்க வேண்டிய பெண் ஆய்வாளர், ஆய்வு செய்யாமலேயே அட்டன்டெண்ஸ் போட்டுள்ளாராம். திருச்சிக்குப் போன காவலர் 29-ம் தேதி பணிக்கு வரவில்லை. அந்தக் காவலரின் பைக் பழுதாக, லோடு ஆட்டோவில் மதுரைக்கு வந்து, அங்கிருந்து எப்படியோ தூத்துக்குடி வந்து பணியில் சேர வேண்டிய 29-ம் தேதி இரவு 10 மணிக்குதான் வந்துள்ளார். இதனால், பெண் ஆய்வாளர் சரியாக ஆய்வு செய்யாமல் அட்டன்டெண்ஸ் போட்டது தெரிந்து, ஓப்பன் மைக்கில் உயரதிகாரி வறுத்தெடுத்தார்.

அருண் பாலகோபாலன் - எஸ்.பி
அருண் பாலகோபாலன் - எஸ்.பி

இதையடுத்து, கண்காணிப்பு செய்த ஆய்வாளருக்கும், திருச்சி சென்ற காவலருக்கும் மெமோ வழங்கப்பட்டது. இதேபோல பைக்கில் சேலத்துக்குச் சென்ற காவலர் ஒருவர் அங்கு ஏதோ பிரச்னையில் மாட்ட, அங்குள்ள காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த எப்.ஐ.ஆர் விவகாரம் எஸ்.பி-யின் கவனத்துக்குப் போக, அந்தக் காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்துதான் ஓய்வு நாள்களில் கடந்த ஒரு மாதத்தில் பைக்குகளில் வெளி மாவட்டம் சென்று வந்த 67 போலீஸாருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலனிடம் பேசினோம், ``ஓய்வு நாள்களில் உள்ளுரில் இல்லாமல் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வந்த போலீஸார்களுக்கு, அந்தந்த காவல்நிலையங்கள் மூலம் மெமோ அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது விளக்கத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு