'ஸ்டாலின் அறிவாலயத்தை பிடிக்கலாம்... ஆட்சியை பிடிக்க முடியாது!' விஜயகாந்த்

ஆரணி: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுமானால் அறிவாலயத்தை பிடிக்கலாம், ஆனால், ஆட்சியை பிடிக்க முடியாது என்று ஆரணியில் நடைபெற்ற தே.மு.தி.க. பிரசாரப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.எம்.பாபுமுருகவேலை ஆதரித்து ஆரணியில் நடைபெற்ற தே.மு.தி.க. பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

அப்போது, ''நான் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தேன். எனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்து முதல்வராக்கினால் அ.தி.மு.க., தி.மு.க.வினர் வைத்துள்ள தமிழ் நாட்டின் கடனை உங்கள் ஒத்துழைப்புடன் அடைப்பேன்.

 

அ.தி.மு.க. என்னை பயமுறுத்தினால் நான் பயப்படமாட்டேன். எங்கள் கட்சிக்காரர்கள் மிலிட்டரிக்காரர்கள், நாங்கள் அதற்கெல்லாம் பயப்படமாட்டோம். தே.மு.தி.க.விலிருந்து நிர்வாகிகள் சிலர் விலகி சென்றுள்ளதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டவே தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணியில் 6 கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து உள்ளோம்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அப்பாவையும், அண்ணனையும் ஏமாற்றி அறிவாலயத்தை வேண்டுமானால் பிடிக்கலாம். ஆனால், ஆட்சியே பிடிக்க முடியாது. அன்று வெள்ளைக்காரர்களை வெளியேற்ற மக்கள் ஒன்று கூடினார்கள் இன்று கொள்ளைக்காரர்களை வெளியேற்ற 6 தலைவர்கள் ஒன்றாக சேர்ந்திருக்கிறோம். இந்த விஜயகாந்த்தை நம்புங்கள். 6 கட்சிகள் கூட்டணி சேர்ந்து, எனக்கு 234 தொகுதிகளிலும் வெற்றியை கொடுப்பார்கள்" என்றார்.

ம.சுமன்
-  படங்கள்:ஏ.ராஜேஷ்
மாணவ பத்திரிகையாளர்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!