நுழைவுத் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கொடுங்கள்! - கொந்தளிக்கும் மருத்துவர்கள் | Doctors Association for Social Equality urges centre to give relief from NEET to students

வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (21/05/2016)

கடைசி தொடர்பு:16:13 (21/05/2016)

நுழைவுத் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கொடுங்கள்! - கொந்தளிக்கும் மருத்துவர்கள்

சென்னை: ஏராளமான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து  மாணவர்களுக்கு விடுதலை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் உள்ள குளறுபடிகளுக்கு நிரந்தரத்தீர்வு காணும் வகையில்,  மத்திய அரசு  தகுந்த சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், “மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அடிப்படையில்தான் அமைத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. இது மாநில அரசுகளின் உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இத்தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதால், பல்வேறு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இந்த தேர்வு நடத்தப்படுவதால் இம்மொழிகளைத் தவிர பிற மொழிகளில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதனாலும் மத்திய அரசின் நுழைவுத் தேர்வை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு திணிப்பதை பல்வேறு மாநில அரசுகள் எதிர்த்தன.

தமிழகத்தில் 2007 ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக மாணவர்கள்,  நுழைவுத்தேர்வுக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில், திடீரென்று மத்திய அரசின் நுழைவுத் தேர்வு திணிக்கப்படுவதைக் கண்டு தமிழக மாணவர்களும்,பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக அரசும் இத்தேர்வை எதிர்த்தது. மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாத்திடவும், முறைகேடுகளை தடுத்திடவும், கட்டாய நன்கொடை வசூலுக்கு முடிவு கட்டிடவும்  வேண்டும். ஏராளமான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து  மாணவர்களுக்கு விடுதலையையும் வழங்கிடவேண்டும். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் உள்ள குளறுபடிகளுக்கு நிரந்தரத்தீர்வு காணும் வகையில், மத்திய அரசு  தகுந்த சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

அதாவது இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளை நிரந்தரமாகப் பாதுகாப்பது,  தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளைப் போல் , தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களும் , மாநில அரசுகளுக்கு 65 விழுக்காடு இடங்களை வழங்குவது,  மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், அகில இந்தியத் தொகுப்பு இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் , தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழக  மருத்துவ இடங்களுக்கும், ஒரே பொது நுழைவுத் தேர்வை நடத்திடுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில்  அந்தச் சட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்.

அந்தப் பொது நுழைவுத் தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் பெற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கக் கூடாது. அந்த ஒரே நுழைவுத்தேர்வை NEET  (National Eligibility Cum Entrance Test)  நடத்தாமல் CET (Common Entrance Test) ஆக நடத்த வேண்டும். கட்டாய நன்கொடையையும், மாணவர் சேர்க்கை முறைகேட்டையும் தடுத்திட,  மேற்கண்ட இடங்களுக்கு ஒற்றைச் சாளரமுறையில்  (Single Window System ) மாணவர் சேர்க்கையையையும் மத்திய அரசே நடத்திட  வேண்டும்.

மேலும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில்,  மத்திய அரசு ஒரு தெளிவான கொள்கை முடிவை எடுத்து, அதை நிறைவேற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்