மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்தது திமுக

சென்னை; மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ. நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல், ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 24 ம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்களாக யார் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் மு.கருணாநிதி, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அறிவிக்கப்படுகிறார்கள்” என்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134, திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைப் பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் அதிமுக 3, திமுக 2 இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெறும்.
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!