டாக்டர் பட்டம் ... அதிகம் இல்லை ஜென்டில் மேன், ஐம்பதாயிரம்தான்..! | Get a Doctorate degree for just Rs. 50,000

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (24/05/2016)

கடைசி தொடர்பு:10:55 (24/05/2016)

டாக்டர் பட்டம் ... அதிகம் இல்லை ஜென்டில் மேன், ஐம்பதாயிரம்தான்..!

ஷ்டப்பட்டு படித்து ஏதாவது ஒரு துறையில் முதுகலைப்பட்டம் வாங்கி, தொடர்ந்து  அதில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில்,  தான் மேற்கொண்ட ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து, அதை வல்லுநர் குழு ஏற்றுக்கொண்ட பிறகுதான்,   நீங்கள் 'டாக்டர்' என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள முடியும். அது கல்வியால் கிடைக்கும் கவுரவம்.

ஆனால், கொஞ்சம் பணம் செலவு செய்தால் போதும்,  அடிப்படை கல்வித்தகுதி துளியும் இல்லாத யாரும்,  இங்கு டாக்டர் பட்டம் பெறமுடியும். அதுவும் இந்திய பல்கலைக்கழகத்தில் அல்ல...  யுனிவர் சிட்டி ஆப் ஜெருசலேம், பாரீஸ்... போன்ற பல்கலைக்கழகங்கள் உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க காத்துக் கொண்டிருகின்றன.

என்னவோ,ஜெருசலேம் என்றதும்  இஸ்ரேல் நாட்டுக்கு  விமானத்தில் பறந்து போய், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கும் டாக்டர் பட்டம் என்று நினைத்தால், உங்களுக்கு விவரம் பத்தாது பாஸ்... இந்த பட்டம் பெற, நீங்கள் கடல் கடந்து அவ்வளவுதூரம் போகத்தேவை இல்லை.

அந்த பல்கலைக்கழகம் சிங்காரச் சென்னையில்,  ஏதாவது ஒரு சந்தில்  10 க்கு 10 அறையில் கூட 
செயல்படலாம். ஈமுக்கோழி ஸ்கீமுக்கு  ஆள்பிடிக்கிற கதையாக நிறைய டெக்னிக்குகளுடன்  புரோக்கர்கள் பலர் வலம் வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றிவரும் இவர்களின் டார்கெட்  படிக்காத தொழிலதிபர்கள்தான்.
குறிப்பிட்ட ஊரில் இருக்கும் அந்த தொழிலதிபரை சந்தித்து  ஆசை வார்த்தை கூறி, மசிய வைப்பார்கள்...அப்புறம் என்ன?  அந்த தொழில் அதிபரை சென்னைக்கு வரவழைத்து ,  ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு யுனிவர்சிட்டி பிரதிநிதிகள் குழு எனப்படும் சூட்டு கோட்டு போட்ட சிலர்,  இவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பார்கள். இவரும் கருப்பு அங்கி, தலைப்பட்டம் சகிதம் டாக்டர் பட்டம் வாங்கியபடி  வாயெல்லாம் பல்லாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து வாங்கிச் செல்வார்.

பட்டம் கொடுத்த கையோடு, 50 ஆயிரம் ரூபாய்  பணத்தை அந்த வெளிநாட்டு யுனிவர்சிட்டி(?) குழுவினர் கட்டணமாக பெற்றுக்கொண்டு,  தயாராய் இருக்கும் அடுத்த் தொழில் அதிபரை வரவேற்க போய்விடுவார்கள்.

பட்டம் பெற்ற இவரும்,  ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனரை வைத்து,   தான் வாங்கிய டாக்டர் பட்டத்தை பறைசாற்றுவார். விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு, காது குத்து கல்யாண பத்திரிகை என்று சகலத்திலும் அந்த தொழிலதிபரின் பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் டாலடிக்கும். 
 
இன்னும் இது போன்ற போலி வெளிநாட்டுப்  பல்கலைக்கழகங்கள்  துணிச்சலாக செயல் படுவதுதான் ஆச்சர்யம்.
 
-ஜி.பழனிச்சாமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்