Published:Updated:

`வீரர்களைவிட பார்வையாளர்களுக்கே அதிக காயம்!’- புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் என்ன நடந்தது?

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 650 காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, வன்னியன் விடுதி கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் மாயன்பெருமாள் கோயில் திடலில், 60-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி விழாவைத் தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன. முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு
வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு

அதன்பின்பு வெளியூர் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடர்ந்து 650 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 200 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். சில காளைகள், வீரர்களைத் தூக்கிவீசிப் பந்தாடியது. ஒரு சில வீரர்கள் மட்டுமே காளைகளின் திமிலைப் பிடித்து ஏறு தழுவினர். போட்டியில் வெற்றிபெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு கட்டில், சில்வர் அண்டா, வாளி, சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

`ஒவ்வொண்ணும் ஒரு மாஸ் சீன்!' அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பு படங்கள்

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதால் வீரர்கள் 11 பேர், பார்வையாளர்கள் 29 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 11 பேர் என மொத்தம் 51 பேர் வரை காயமடைந்தனர். தடுப்பு வேலிகள் குறைவான தூரத்துக்கு அமைக்கப்பட்டதாலேயே பார்வையாளர்கள் தரப்பில் அதிகமானோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அருகிலேயே மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அறந்தாங்கி, வடகாடு, ஆலங்குடி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

இந்த வருடம், வெற்றிபெற்ற மாடுகள், வீரர்கள் மட்டுமின்றி வெற்றிக்காக முயற்சி மேற்கொண்ட வீரர்கள் மற்றும் பிடிபட்ட மாடுகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மேடையின் ஒருபக்க பந்தல் கீழே சரிந்துவிழுந்தது. பந்தலில் இருந்த வடகாடு இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாஸ் மற்றும் காவலர்கள் சிலர் கீழே விழுந்தனர். இதில், இன்ஸ்பெக்டருக்கு தோள்பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு